சனி, 28 செப்டம்பர், 2024

கண்டெய்னர் லாரிக்குள் இருந்த வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை

  தினமணி : காரில் வந்து கண்டெய்னரில் திரும்பும் வடமாநில கொள்ளைக் கும்பல்: காவல்துறை
நாமக்கல்: ஹரியாணாவிலிருந்து, 7 பேர் கொண்ட கும்பல், மூன்று குழுக்களாகப் பிரிந்து தனித்தனியாகவே கேரளம் வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து, கொள்ளையடித்துவிட்டு, பணத்துடன் ஹரியாணா தப்பிச் செல்ல முயன்ற வடமாநில கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் பிடிபட்டது குறித்து சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.



அப்போது அவர் கூறுகையில், கண்டெய்னர் லாரியிலேயே கொள்ளையர்கள் கேரளம் வந்தார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கண்டெய்னர் லாரிக்கும் கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை, கண்டெய்னடர் லாரி சரக்குகளைக் கையாளும் நிறுவனத்தின் மூலம் சரக்குகளை ஏற்றிக்கொண்ட கேரளத்துக்கு வந்துள்ளது.

அந்த சரக்கு லாரியுடன், ஹரியாணா கொள்ளை கும்பல் மூன்றுக் குழுவாக பிரிந்து கிளம்பியிருக்கிறார்கள்.

தில்லியிலிருந்து சரக்குகளை கொண்டு வருகிறது. அதனுடன் ஒரு குழு கிரேட்டா காரில் வருகிறது. இரண்டு பேர் தனியாக கேரளம் வருகிறார்கள். மூன்று குழுவும் திருச்சூரில் சந்திக்கிறார்கள்.

பிறகு ஒன்றாக அல்லது ஒரு சிறு குழுவாக கிரேட்டா காரில் சென்று, கூகுள் மேப் மூலம் எஸ்பிஐ ஏடிஎம்கள் எங்கிருக்கின்றன என்பதை அறிந்து அதில் கொள்ளையடித்துவிட்டு காரிலேயே வெளியேறுகிறார்கள்.

அதற்குள், லாரி சரக்குகளை இறக்கிவிட்டு, காலியாக ஹரியாணா திரும்புகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு காருடன் இவர்கள் கண்டெய்னருக்குள் ஏறிவிடுகிறார்கள், இதனால், கொள்ளையில் ஈடுபட்ட காரைத் தேசிய நெடுஞ்சாலையில் தேடினால், பிடிக்க முடியாமல் போய்விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, சரக்கு லாரிகள் செல்லும் மாநிலங்களுக்கு வருகிறார்கள், திரும்பும் போது காலியாக செல்லும் கண்டெய்னரில் ஏறி விடுகிறார்கள். கேஸ் கட்டிங் மூலம்தான் பணம் சேதாரம் ஆகாமல் முதல் லேயரை வெட்டி எடுத்துவிட்டு ரொக்கத்தை எடுக்கிறார்கள். இவர்களது ஒரே குறிக்கோள் ஏடிஎம் மையங்கள்தான் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற வடமாநில கொள்ளை கும்பலை தமிழக காவல்துறையினர் தீரத்துடன் செயல்பட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வடமாநில கொள்ளை கும்பலை பிடித்தபோது, அதிலிருந்த அசாருதீன் பணப்பையுடன் தப்பியோடுகிறார். அவர் பின்னால் ஜுமான் என்பவர் ஓடினார். ஜுமானை எஸ்ஐ பிடிக்க முயன்றபோது, அவரை ஜுமான் தாக்கினார். இதனால், பின்னால் வந்த ஆய்வாளர் ஜுமானை சுட்டதில் அவர் பலியானார். அசாருதீன் காவலர்களை நோக்கி கற்களை வீசி தாக்கியதால், அவரையும் முட்டியில் சுட்டுப் பிடித்தோம்.

முன்னதாக, கேரளத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை குறித்து நமக்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கண்டெய்னர் லாரியை மடக்க முயன்றோம்.

ஆனால் தப்பி வேகமாகச் சென்று இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இடித்தபடி சென்ற வாகனத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

வடமாநில கொள்ளையர்கள் ஏழு பேருமே ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 5 பேர் பல்வாலா மாவட்டத்தையும் 2 பேர் நூ மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கண்டெய்னர் லாரியில் இருந்தது கிரேட்டா கார் என்பதும், ஏடிஎம்களை உடைக்கும் குற்றச்செயலில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் என்பதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலில் கிரேட்டா காரின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

வடமாநில கொள்ளையர்கள் ஏழு பேர் லாரியில் இருந்தனர். ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார், ஒருவர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீது தமிழகத்தில் இதுவரை எந்த வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த மேவாத் குற்றவாளிகளை ஏற்கனவே பிடித்திருக்கிறோம். இவர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க கிருஷ்ணகிரி காவல்துறை வந்துள்ளதாகவும் டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக