செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ஓட்டல்களில் உணவு பார்சல் . உணவு சூடு ஆறாமல் இருக்க சில வழிமுறைகள்

May be an image of 1 person, dim sum, tofu and text

வெங்கடேஷ் ஆறுமுகம் :  பார்சல் என்னும் கலை
ஓட்டல்களில் உணவுகளை பார்சல் செய்ய, உணவு சூடு ஆறாமல் இருக்க இன்றைக்கு நவீன பேக்கிங் மெட்டீரியல்கள் ஏராளமாக வந்து விட்டன.
இருந்தாலும் அன்றைக்கு எல்லா ஓட்டல்களிலும் பார்சல் என்றால் நியூஸ் பேப்பரும், வாழையிலையும் தான். அந்த பார்சல் கட்டுவதும் ஒரு தனிக்கலை என்பதே உண்மை.
“இட்லிக்கு வலிக்காம கட்டுப்பா” என என் தந்தை அடிக்கடி சொல்வார்.
பார்சலில் முதலில் இட்லியிலிருந்து வருவோம். இட்லி ஒரு பார்சலுக்கு 2 அதிகபட்சம் 4 இருப்பதே சரியான பார்சல் முறை ஆகும்.
10 இட்லி பார்சல் கேட்டாலும் அப்பா இரண்டு 4 இட்லிகள் பொட்டலங்களும் ஒரு 2இட்லிகள் பொட்டலமும் தான் தருவார்!


நாலு இட்லிக்கு மேல் நிச்சயம் ஒரு பார்சலில் இருக்காது! அதே போல சட்னி வைத்து மேலே இலை வைத்து மூடி செய்யும் பார்சல் என்பது கிடையவே கிடையாது. சட்னிகள் தனிப் பார்சலாக, இட்லிகள் தனிப் பார்சலாகத்தான் இருக்கும். அன்று சாம்பார் சட்னிக்கு தனித்தனியே பாத்திரங்கள் கொண்டு வந்துவிடுவார்கள்.
அதனால் சட்னி பார்சல் என்றால் நிச்சயம் அது வீட்டிற்கு இல்லை என அறியலாம்! பார்சல் கட்டும் பேப்பர் கிழித்து வைத்த பின்பு கிழித்த பேப்பரை விட அரை இஞ்ச் சுற்றளவு கூடிய அளவில் தான் வாழை இலையை நறுக்குவோம். ஏனெனில் பார்சலை மடிக்கும் போது தவறியும் நியூஸ் பேப்பர் உணவுகளின் மீது பட்டுவிடக்கூடாது!
இலை மட்டும் தான் உணவின் மீது படவேண்டும். ஐ என்னும் எழுத்து வடிவில் 4 இட்லிகளை வைத்து நாலா புறமும் இட்லியை அழுத்தாமல் பேப்பரை மடிக்க வேண்டும். இப்படி மடிக்கும் போது பார்சல் மிகச் சரியாக சதுரவடிவில் இருக்கும். அதன் பின் கூட்டல் குறி போல நூலை குறுக்கும் நெடுக்கும் சுற்றிக் கட்டுவது சிறந்த முறையாகும்.
மதுரையில் சன்னமான  சணல் கயிறு  உபயோகிப்பார்கள். பார்சல் நூலை வைத்தே அது எந்த ஊரில் கட்டப்பட்ட பார்சல் என்பதை அப்பா சொல்லிவிடுவார்! அதே போல இலைகளில் வாழை இலை தவிர தையல் இலை, மந்தாரை இலை, புரசை இலை என பல ஊர்களில் பயன்படுத்துவார்கள். அந்த இலைகளை வைத்தே..
எந்த ஊரில் பார்சல் கட்டியது என்பதை சொல்லிவிடலாம். இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிரம்பிய இலைகள். இதில் கட்டப்பட்ட உணவுகள் அதன் ருசியை இன்னமும் கூட்டுமே தவிர குறைக்காது. எந்தெந்த உணவு வகைகளை பார்சல் கட்ட வேண்டும் என அப்பா வகுத்து வைத்துள்ள விதிமுறைகள் சுவாரஸ்யமானது!
பொங்கல், புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், பணியாரம், கலவை சாதங்கள் போன்றவை பார்சல் கட்ட வேண்டிய உணவுகள் ஆகும். பார்சலில் வாங்கக் கூடாத உணவுகள் பூரி, தோசை, ரவா தோசை, நெய் ரோஸ்ட், மெல்லிய தோசைகள் அனைத்தும். ஊத்தப்பம் மட்டும் விதி விலக்கு! ரவா தோசை எல்லாம் செம்புலப் பெயல் நீர் போல!
பார்சலுக்குள் இரண்டாக மடிந்து ஃபெவிகால் போட்டது போல ஒட்டிக்கொள்ளும்! அதே போல பூரியை நடுவில் மசால் வைத்து பார்சல் கட்டுபவனுக்கு கருட புராணத்தில் இருக்கும் எல்லா தண்டனைகளையும் ஒன்றாக வழங்கி விடலாம். ஊதுபத்தி கண்டெயினர் போல தோசையை உருட்டி கட்டித்தருவார்கள்.
இலைகளுக்குள் அங்கப் பிரதட்சணம் செய்த தோசை உருண்டு பிரண்டு தன் தோசை அடையாளத்தை இழந்து ஆதார் கார்டில் தெரியும் நம் முகம் போல மாறிவிடும். அன்று ஜவுளிக் கடைகளில் தரும் காக்கி கலர் காகித பேப்பரில் பூரியை மட்டும் போட்டு பார்சலாகத் தருவார் அப்பா! அது மிகுந்த வரவேற்பை பெற்றது.
நிறைய வாடிக்கையாளர்களிடம், நெய் ரோஸ்ட், ரவா, இதெல்லாம் பார்சலில் வாங்காதிங்க சார் என்பார். அதெல்லாம் கல்லில் இருந்து சூடாக எடுத்ததும் நேராக நாம் சாப்பிடும் தட்டுக்கு வரவேண்டியவை என்பார். சில பேர் அண்ணே முறுகலா ஒரு நெய்ரோஸ்ட் பார்சல்னு கேட்டு வருவார்கள். ஓங்கி அறையலாம் போலத் தோன்றும்!
முறுகலான தோசையை பார்சல் கட்டினால் அது அப்பளம் போல நொறுங்கிவிடும். பார்சலை பிரித்தால் நொறுங்கி, பிய்ந்த தோசை பழைய சினிமாக்களில் வில்லனால் ரேப் செய்யப்பட்ட கதாநாயகி போல அலங்கோலமாக காட்சியளிக்கும். இதெல்லாம் அந்தந்த உணவுகளுக்கு நாம் செய்யும் துரோகங்கள் என்பார் அப்பா!
பார்சல் கேட்டு வர்றவங்க எல்லாருக்கும் இதெல்லாம் தெரியாது தம்பி! உணவுத் தொழிலில் இருக்குற நாம தான் இதை அவங்களுக்கு நயமா எடுத்துச் சொல்லணும் என்பார். சின்ன ஊத்தப்பம் என்றால் கூட தனித் தனியாகத்தான் பார்சல் இருக்கும். 10 இட்லியை ஒண்ணா கட்டுங்க 4 தோசையை ஒண்ணா கட்டுங்க என்று சிலர் வருவார்கள்.
அவர்களிடம் தம்பி மனிதன் சமூகத்தில் வேணா ஒண்ணா இருக்கலாம் சாப்பாட்டில் ஒண்ணா கலந்தா நல்லாருக்காதுன்னு சொல்லிவிடுதல் நல்லது.அதே போல கலவை சாதங்களுக்கு தயிர் சாதம் கட்டும் போது 2 பேப்பர் அதன் மேல் 2 அடுக்கு இலை வைத்து கட்டச் சொல்வார். தயிர் சாதம் சீக்கிரம் ஊறும் என்பதால் பார்சல் கிழியும்.
புளியோதரை, வெஜிடபிள் பிரியாணி போன்ற எண்ணெய் கசியும் சாதங்களுக்கு பேப்பர் 3 போட்டு கட்டுவோம் எண்ணெய் உறிஞ்சும் என்பதால்.பார்சல் என்றால் உள்ளே இருக்கும் உணவை அழுத்தாமல்  மடித்து கட்டவேண்டும். கட்டிய பார்சலின் விளிம்புகளில் வாழையிலை வெளியே தலை காட்ட பேப்பர் அதற்கு கீழ் தெரிய வேண்டும்.
முக்கியமாக சிகரெட், பீடி குடிப்பவர்களை பார்சல் செக்‌ஷனில் போட மாட்டார் அப்பா. அதே போல விரலில் நீளமான நகங்கள், கைகளில் புண்கள் போன்றவை இருந்தால் அவர் பார்சலில் இருக்க மாட்டார். பார்சல் கட்டும் இடத்தில் ஜில்லென ஒரு பாத்திரத்தில் நீர் இருக்கும் சூடான உணவுகளை பார்சல் கட்ட எடுப்பவர்கள் அடிக்கடி..
கை நனைக்க! அந்த நீரே அரை மணி நேரத்தில் சூடாகிவிடும், அவ்வப்போது அதையும் மாற்றிவிடச் சொல்லுவார். பார்சல் கட்டுபவர்கள் கை தாமரை இதழ்கள் நிறத்தில் சிவந்து இருக்கும். சாதாரண பார்சல் தானே என்றி அசட்டையாக இல்லாமல் அதையும் கவனித்து ஒரு ஓவியன் போல அதை கலையாகச் செய்தவர் அப்பா.!
இந்தப் பதிவே இவ்வளவு நீண்டதால் இதில் சொல்ல நினைத்ததை பார்ட் 2வாக எழுதுகிறேன்!
{அடுத்த பதிவு பார்சல் கட்டும் இலைகளின் மருத்துவ குணங்கள், இலைகளால் பார்சல் கட்டப்பட்டதால் ருசி அதிகமாகும் உணவுகள் பற்றியது}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக