புதன், 11 செப்டம்பர், 2024

மதுரையில் உதயநிதி- தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்..என்னாச்சு?

 tamil.oneindia.com  - Rajkumar R  : மதுரை : மதுரையில் நேற்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதால் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு சென்றார்.


அங்கு மதுரை ஒத்தக்கடையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான சுழல் நிதி கடன் உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை மக்கள் தேடிச் செல்லும் காலம் போய், மக்களை தேடி திட்டங்கள் செல்கின்றன என பேசினார்.

இதையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம், காத்திருப்பு அறை, கழிவறை ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சில இடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது.

மேலும், மாட்டுத்தாவணியில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளிடம் கலந்துரையாடி, பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த குறைகளைக் கேட்டு, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், மக்கள் பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும், இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
udhayanidhi stalin dmk madurai

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சில குறைகள் இருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று அங்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளோம். இன்று மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்போம். எந்த மாவட்டத்திற்கு போனாலும் ஆய்வு செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இங்கும் ஆய்வு நடத்தினோம். என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் நேற்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வரும் அரசின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

அந்த ஆய்வின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில அலுவலர்களிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கை காரணமாக வழங்கிய அறிவுரைகள் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டாட்சியரும், ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒரு சுகாதார ஆய்வாளரும் ,ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோர் உடனடியாக பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் இரண்டு விடுதிக்காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக