ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

விஜய்யின் வெயிட் என்ன? ஸ்டாலின் எடுத்த அவசர சர்வே

 minnambalam.com - Aara  ஆகஸ்டு 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, கட்சியின் கொடியேற்றி வைத்திருக்கிறார் விஜய்.
சரியாக ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஒவ்வொரு நகர்வு தொடர்பாக ஆளுங்கட்சியான திமுக உற்று கவனித்துக் கொண்டே இருக்கிறது. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் இன்றைய பலம் என்ன என்பதை அறிய விரும்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கட்சி ஆரம்பிக்கிறேன் என்ற அறிவிப்பு, அடுத்தது பெயர் அறிவிப்பு, அப்புறம் கொடி அறிமுகம், அடுத்த கட்டமாக மாநாடு என்று விஜய்யின் நகர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன? விஜய்க்கு இப்போது தமிழக மக்களிடம் எத்தனை சதவிகித ஆதரவு இருக்கிறது?  இதுபோன்ற கேவிகளோடு, ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிரத்யேக சர்வே ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

விஜய்யின் கொடி அறிமுகத்துக்குப் பிறகு தமிழ்நாடு முழுதும் பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த அவசர சர்வேயில் தற்போதைய நிலவரப்படி விஜய்க்கு மாநிலத்தில் 10%  வரை ஆதரவு இருப்பதாக கணக்கிடப்பட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது.

இன்னமும் மாநாடு இருக்கிறது, அதில் விஜய்யின் பேச்சு, அதைத் தாண்டி 2026 சட்டமன்றத் தேர்தலை அவர் அணுகும் விதம், கூட்டணியாக வருகிறாரா, தனித்து போட்டியிடுகிறாரா ஆகிய நிலைப்பாடுகளின் அடிப்படையில் அவரது செல்வாக்கில் மாறுபாடு ஏற்படலாம் என்றும் அந்த சர்வேயில் அப்சர்வேஷன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆளுந்தரப்பு வட்டாரங்களில்.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக