வெள்ளி, 5 ஏப்ரல், 2024

முதல்வர் ஸ்டாலினிடம் சோனியா காந்தி சிதம்பரம் மூலம்சொல்லிய முக்கிய செய்தி

 மின்னம்பலம் -Aara :  ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பிய முக்கிய மெசேஜ்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
“முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று (ஏப்ரல் 4) மாலை மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
அதற்கு முன்பாக நேற்று பகல் அமைச்சர் சேகர்பாபுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் சிதம்பரம். அமைச்சர் சேகர்பாபு சில நிமிடங்கள் இருந்து விட்டு வெளியே வந்து விட, ஸ்டாலினும் சிதம்பரமும் தன்னந்தனியாக 10 நிமிடங்கள் ஒருவருக்கொருவர் முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.



தமிழ்நாட்டின் அரசியல் சூழல், இந்திய அளவிலான அரசியல் சூழல் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இது மட்டுமல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தி ஒரு முக்கியமான விஷயத்தை சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து ஆறு கட்ட தேர்தல்கள் இந்தியா முழுவதும் நடக்க இருக்கின்றன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் பாஜக அரசின் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 1700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிதி விவகாரத்தில் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.

தேர்தல் பரப்புரைக்கு விமானங்கள் வாடகைக்கு எடுப்பது, ரயில் கட்டணம் செலுத்துவது, தேர்தல் விளம்பரங்கள் செய்வது ஆகியவற்றுக்கு கூட காங்கிரஸ் கட்சியிடம் அதிகாரப்பூர்வமாக நிதி இல்லை என்று சோனியா காந்தியே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை அவர்களது தேர்தல் பணிகளை கூட செய்ய விடாமல் மோடி அரசு முடக்கி இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில்தான் ப. சிதம்பரம் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இருக்கின்ற நிதி நெருக்கடிகளையும் அவற்றை சமாளிப்பதற்கு அந்தக் கட்சி மேற்கொண்டு வருகிற முயற்சிகளையும் ஸ்டாலினிடம் விளக்கியிருக்கிறார் சிதம்பரம், இந்த நிதி நெருக்கடிக்கிடையே அடுத்த ஆறு கட்ட தேர்தல்களை எதிர்கொள்வதற்கு திமுகவின் உதவி தேவை என்று சோனியா காந்தியின் கோரிக்கையை ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார். இதுதான் நேற்று நடந்த இந்த சந்திப்பின் சாராம்சம் என்கிறார்கள் இரு கட்சி வட்டாரத்திலும்.

ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் அடிப்படை ஆரம்பகட்ட செலவுகளை கூட செய்யவில்லை என்று திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றன. இதுகுறித்து வெறுங் ‘கை’ வேட்பாளர்கள்… வெறுப்பில் அமைச்சர்கள்… ஸ்டாலின் உத்தரவு என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையிலேயே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மாசெக்களின் புகார்களுக்கு, ’இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு நாமே செலவு செய்தாலும் பரவாயில்லை. அவர்கள் செலவு செய்யும் வரை காத்துக் கொண்டிருக்காமல் ஆக வேண்டிய விஷயங்களை பாருங்கள்’ என்று உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் தேசிய காங்கிரஸ் தலைமையே நிதி நெருக்கடி தொடர்பாக ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் என்ன என்பதுதான் டெல்லி எதிர்பார்த்திருக்கும் விஷயம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக