வெள்ளி, 5 ஏப்ரல், 2024

வாட்ஜ் பேங்க்: கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியா பெற்ற 6,500ச.கி.மீ நிலப்பகுதியில் என்ன இருக்கிறது?

வாட்ஜ் பேங்க்

பிபிசி     முரளிதரன் காசிவிஸ்வநாதன்  - பிபிசி செய்தியாளர் : காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தந்துவிட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டிவரும் நிலையில், அதற்குப் பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த 'Wadge Bank' பகுதியை பெற்றதாக காங்கிரஸ் கூறியிருக்கிறது. இந்த Wadge bank பகுதி எங்கே இருக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன?
1974ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லையை வகுக்கும்போது, கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பா.ஜ.கவின் பெரும்பாலான தலைவர்கள் இந்த விவகாரத்தை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர்.



இந்த நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரிக்கும்போது, வளம்மிக்க 'வாட்ஜ் பேங்க்' பகுதியை இந்தியா பெற்றுத்தந்தாக காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது. இந்தப் பகுதி எப்படி இந்தியாவுக்குக் கிடைத்தது?
வாட்ஜ் பேங்க் பகுதியின் மீது இந்தியாவின் இறையாண்மை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் எல்லையை வகுக்கும் வகையில் இரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. முதலாவது ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாக் நீரிணை பகுதியில் எல்லை வகுக்கப்பட்டது. இதன்படியே கச்சத்தீவு இலங்கை பகுதியைச் சேர்ந்தது என முடிவெடுக்கப்பட்டது.

இரண்டாவது ஒப்பந்தம் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லையை வரையறுத்தது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங்கும் இலங்கையின் வெளியுறவுத் துறை செயலர் டபிள்யு. டி.ஜெயசிங்கேவும் கையெழுத்திட்டனர்.

இதற்குப் பிறகு கேவல் சிங், டபிள்யு டி ஜெயசிங்கேவுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் வாட்ஜ் பேங்க் பகுதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டார்.

"வாட்ஜ் பேங்கில் மீன் பிடிப்பது தொடர்பாக இரு அரசுகளுக்கும் இடையில் பின்வரும் புரிந்துணர்வு எட்டப்பட்டிருக்கிறது.

1. கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாட்ஜ் பேங்க், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியின் மீதும் அதன் வளங்கள் மீதும் இந்தியாவுக்கு முழு இறையாண்மை உண்டு.

2. இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகளோ, மீனவர்களோ வாட்ஜ் பேங்க் பகுதியில் மீன் பிடிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா உரிமம் வழங்கும் படகுகள் மட்டும் அங்கே மீன் பிடிக்கலாம். இந்த காலகட்டத்திற்குப் பிறகு வாட்ஜ் பேங்க் பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் மீன் பிடிக்கக்கூடாது.

3. இதற்காக இந்தியா விதிக்கும் கட்டணத்தையும் நிபந்தனைகளையும் இலங்கை மீன்பிடிப் படகுகள் ஏற்க வேண்டும்.

4. வாட்ஜ் பேங்க் பகுதியில் பெட்ரோலியமோ, பிற தனிமங்களோ கிடைக்கிறதா என இந்தியா ஆராய நினைத்தால், அது பற்றி இலங்கைக்குத் தெரிவிக்கப்படும். இந்தியா சொல்லும் தேதியில் இலங்கை படகுகள் வருவது நிறுத்தப்பட வேண்டும்.

5. வாட்ஜ் பேங்க் பகுதியில் இலங்கையின் படகுகள் மீன் பிடிப்பது தடுக்கப்படுவதால், புதிதாக மீன்பிடி மண்டலங்களை உருவாக்க இந்தியா இலங்கைக்கு உதவிசெய்யும்" என அந்தக் கடிதத்தில் கூறினார்.

இதனை ஏற்பதாக டபிள்யு. டி. ஜெயசிங்கே பதில் கடிதம் ஒன்றை எழுதினார். இந்த ஒப்பந்தத்தின்படியே வாட்ஜ் பேங்க் பகுதி இந்தியாவுக்குக் கிடைத்தது.
வாட்ஜ் பேங்க் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கில் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடற்பகுதி. சரியாகச் சொல்வதெனில், கன்னியாகுமரிக்குத் தெற்கில், கடலடியில் அமைந்துள்ள கண்டத்திட்டின் முனைப் பகுதி இது. இது இந்தியாவின் கடல் எல்லை பகுதிக்கு அப்பால் இருந்தாலும், அதன் மீதான உரிமையை இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளும் உறுதிசெய்துள்ளன. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கும்.

வாட்ஜ் பேங்க் பகுதி 4,000 சதுர மைல் (சுமார் 6,500 சகிமீ) பரப்பளவுடையது. இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால் மீன் வளமும் அதிகம். இந்த கடற்பகுதியில் வெப்ப நிலை மிதமானதாக இருந்தாலும், உப்புத் தன்மை அதிகமாக இருக்கும். இந்தப் பகுதி மீன்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த பகுதியாக கருதப்படுகிறது. மே மாதம் முதல் அக்டோபர் வரை மீன் பிடிக்க மிகச் சிறந்த காலமாகக் கருதப்படுகிறது.

இந்தப் பகுதியில் மீன் பிடிக்க கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல், சின்ன முட்டம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகள் செல்கின்றன. கேரளாவின் விழிஞ்சம் பகுதியிலிருந்தும் படகுகள் வருகின்றன.

இந்தப் பகுதியில் சுமார் 425 வகையான மீன்கள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியிலிருந்து வருடத்திற்கு 65,000 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மீன்களைப் பிடிக்க முடியும்.

வாட்ஜ் பேங்க் பகுதி மீன் மற்றும் பல்லுயிர் வளத்திற்காக அறியப்பட்ட பகுதியாக இருந்தாலும் இந்தப் பகுதியில் பெட்ரோலியம் கிடைக்கும் சாத்தியமும் இருப்பதாக இந்தியா கருதுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது. அந்த நோட்டீஸில், வாட்ஜ் பேங்க் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று இடங்களில் பெட்ரோலியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது.

ஆனால், இதற்கு கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இங்கு எண்ணெய் துரப்பணம் செய்யக்கூடாது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி. தேவசகாயம் மத்திய மீன் வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.

ஆனால், இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்யும் எண்ணம் இந்தியாவுக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக