சனி, 6 ஏப்ரல், 2024

மாநில உரிமைகள்…காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…வரலாறு மாறியது எப்படி?

மின்னம்பலம் -vivekanandhan :  காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாநில உரிமைகள் தொடர்பான பல முக்கியமான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு சாசனம் உருவான காலம் தொட்டு மாநிலங்களின் அதிகாரத்தினைப் பறித்து வருவதாக கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட கட்சி காங்கிரஸ்.
பாராளுமன்றத்தை அதிரவைத்த அண்ணா
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தனிநாடு கேட்டு முழக்கமிட்டதும், மாநில சுயாட்சி என்று ஓங்கி ஒலித்ததும் காங்கிரசின் ஆட்சியை எதிர்த்துத் தான். முதல்முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்தபோது நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று பேசி பாராளுமன்றத்தையே அதிர வைத்தார் பேரறிஞர் அண்ணா. மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத்தில்  ஓங்கி ஒலித்த முதல் குரல் அண்ணாவுடையது.

”நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது என்பதே என் குற்றச்சாட்டுமாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல் விரைந்து மாறி வருகின்றன. அவை இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன” என்று 1962 இல் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார் அண்ணா.

கலைஞர் உருவாக்கிய ராஜமன்னார் குழு

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த கலைஞர் கருணாநிதி மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்கு 1969 இல் ராஜமன்னார் குழுவினை அமைத்தார். இந்தியாவிலேயே முதன்முதலில் இப்படி ஒரு அறிக்கையை தமிழ்நாடு தான் முன்வைத்தது.

எமெர்ஜென்சியில் பறிக்கப்பட்ட மாநில அதிகாரங்கள்

ஆனால் அதன்பிறகும், இந்திரா காந்தியால் 1975 இல் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டு காலத்தில், மாநிலங்கள் மட்டுமே சட்டமியற்ற முடியும் எனும் அதிகாரம் கொண்ட பல்வேறு பிரிவுகள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசின் கை என்பது இன்னும் ஓங்கியது.

அப்போது உயர்கல்வியானது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் தான் இன்றுவரை மத்திய அரசால் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை, நீட் போன்ற அனைத்து விவகாரங்களிலும் தமிழ்நாட்டில் மாநில அரசு எதிர்த்தாலும், மத்திய அரசால் அது அமல்படுத்தப்படுவதை தடுக்க முடியவில்லை.

இப்படி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் பயன்படுத்தித்தான் பாஜக அரசு மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கிறது என்ற குற்றச்சாட்டு இன்றுவரை காங்கிரஸ் மீது அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

மாற்றம் வந்தது எப்படி?

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதே ஒற்றை மனப்பாங்கு தொடர்ந்ததால்தான், பல மாநிலங்களில் உடைவையும் கண்டது. காங்கிரசிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என அடுத்தடுத்து பல கட்சிகள் தனியாக உருவெடுத்து, காங்கிரசை பலவீனப்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் ஆள்கின்ற மாநிலங்களை குறிவைத்து பாஜக உருவாக்கிய நெருக்கடி, மாநில அதிகாரங்கள் பற்றி இதுநாள் வரையில் கொண்டிருந்த தனது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய இடத்தை நோக்கி காங்கிரசை தள்ளியிருக்கிறது என்று சொல்லலாம்.

எது எப்படி இருந்தாலும் கால சுழற்சியின் விளைவாக மாநில உரிமைகள் விவகாரத்தில் காங்கிரஸ் வந்தடைந்திருக்கிற இந்த இடம் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மாநில உரிமைகள் பற்றி காங்கிரஸ் அறிக்கையில் அப்படி என்ன இருக்கிறது? 

  • இந்திய அரசியல் சாசனத்தின் 7வது பட்டியலில் மாநிலங்கள் மட்டுமே சட்டம் இயற்றக் கூடிய விவகாரங்கள் மாநிலப் பட்டியலிலும், மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகளும் சட்டமியற்றக் கூடிய விவகாரங்கள் பொதுப் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பட்டியல் தொடர்பான விவகாரங்களில் சட்டமியற்றுவதில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே முரண்பாடு எழும்போது அதில் மத்திய அரசின் முடிவே இறுதியானது. இந்த பட்டியல்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி பொதுப்பட்டியலில் உள்ள சில துறைகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தேசிய கட்சியின் தேர்தல் அறிக்கையில் இப்படி ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே நாடு என்ற ஒற்றைத்துவத்தை இந்தியாவின் கோட்பாடாக முன்வைக்கும் பாஜகவிற்கு சித்தாந்த ரீதியான எதிர் தரப்பாக தன்னை முன்னுறுத்தியிருக்கிறது காங்கிரஸ் என்றே பார்க்கப்படுகிறது.
  • NEET, CUET போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கான தகுதித் தேர்வு மத்திய அரசினால் நடத்தப்படுவது பல விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதனை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி மாநிலங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே நீட் தேர்வை நடத்தலாம் என்று மாற்றுவோம் என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
  • பாஜக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையானது (NEP) பல மாநில அரசுகளால் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய கல்விக் கொள்கையை மறு பார்வைக்கு உட்படுத்தி, மாநில அரசுகளின் ஆலோசனைகளுடன் அதனை மாற்றத்திற்கு உட்படுத்துவோம் என்பதனை தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அளித்துள்ளது.
  • இந்தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதைக் குறிப்பிட்டு, இதுதான் இந்தியக் கூட்டாட்சியை வழிநடத்தும் தத்துவம் என்று தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கு வரிகளைப் பிரித்துக் கொடுப்பது தொடர்பாக பாஜக அரசின் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் வரிகளை குறைத்து விட்டு, மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கத் தேவையில்லாத செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்றவற்றை தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்பதுதான். இதன்மூலம் மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறையை பாஜக உருவாக்குகிறது என்று தொடர்ந்து பல மாநில அரசுகள் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் செஸ் மற்றும் சர்சார்ஜ் இவை நாட்டின் மொத்த வரி வருவாயில் 5% சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற வரம்பினை புதிய சட்டம் போட்டு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
  • அடுத்ததாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் நிதி ஆணையத்தின் மீது வைக்கக் கூடிய குற்றச்சாட்டு என்னவென்றால், நாங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை சிறப்பாக செய்திருக்கிறோம், ஆனால் மக்கள் தொகை குறைந்துவிட்டதை காரணமாகக் காட்டி எங்களுக்கு நிதியைக் குறைக்கிறீர்கள் என்பதுதான். இப்போது காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும், வரி வசூலிப்பதில் மேற்கொண்ட முயற்சிகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப வரிப் பங்கீட்டினை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிதி ஆணையத்திற்கு அறிவுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாஜக அரசு கொண்டு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் கூட்டாட்சிக் கோட்பாட்டை அழித்துவிடும் என்று அதனை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தினை நிராகரிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் அறிக்கை முழுவதும் பெரும்பாலான இடங்களில் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து செய்வோம், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செய்வோம் என்ற வார்த்தைகள் மிகக் கவனத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெறும் வார்த்தைகளாக அணுகாமல், தேர்தல் அறிக்கையின் ஒரு அங்கமாக முன்வைத்து, மாநில உரிமைகள் விவகாரத்தில் காங்கிரஸ் அடைந்திருக்கிற பரிணாம வளர்ச்சி இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.

விவேகானந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக