திங்கள், 18 மார்ச், 2024

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்

வீரகேசரி : கோத்தபாய ராஜபக்சவை வீழ்த்திய தளபதிகள்
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி“ என்ற நூலில், பாதுகாப்பு உயர்மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் கோத்தபாய   ராஜபக்ஷ.
அவர் எதனைப் பலமாக கருதினாரோ அதுவே அவருக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதனைப் பலப்படுத்தியதாக கூறினாரோ, அதன் பலவீனங்களை அவரே இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் தன்னுடன் நீண்டகாலம் பணியாற்றிய படை அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொண்டார்.
தன்னைச் சூழ, தனக்கு நெருக்கமானவர்களை வைத்திருப்பது பாதுகாப்பானது என்று அவர் கருதினார். தனக்கு நம்பிக்கையானவர்களை அருகில் வைத்திருப்பதன் மூலம் இலகுவாக அதிகாரத்தைச் செலுத்தலாம் என்று அவர் எண்ணினார்.  

 ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவின் அந்த எண்ணம் விரைவிலேயே சுக்குநூறாக நொருங்கிப் போனது. இரண்டரை ஆண்டுகளிலேயே அவர் ஜனாதிபதி பதவியை கைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குக் கொண்டு சென்றது.

தங்களுக்கு நெருக்கமான பாதுகாப்பு அதிகாரிகள் என எவரையும் கொண்டிராத ரணிலும், மைத்திரியும், இலாவகமாக தங்களின் அதிகாரத்தைக் கையாண்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அணுகுமுறை போர்க்களத்தில் வெற்றியைக் கொடுத்திருந்தாலும், அரசியல் களத்தில் வெற்றியைக் கொடுக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ தனது நூலில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு பற்றிச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற போது, ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக இருந்தார். கோட்டா பதவியேற்றதும், ஜெனரல் கமல் குணரத்னவை, பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார்.

இதன் மூலம், ஒட்டுமொத்த பாதுகாப்புத் தரப்பையும், தம்மால் இலகுவாக கையாளலாம் என்று கருதினார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு நிராசையானது.

தாம் பதவியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக அவர், கமல் குணரத்னவுக்கும், சவேந்திர சில்வாவுக்கும் இடையிலான முரண்பாட்டை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனை அவர் கட்டமைப்பு ரீதியான குறைபாடென வர்ணித்திருக்கிறார்.

“நான் பல வருடங்கள் என்னுடன் பணியாற்றிய நீண்டகால அனுபவமுள்ள அதிகாரிகளை சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் மிக முக்கியமான பதவிகளில் நியமித்தேன்.

தொற்றுப் பரவலுக்கு எதிராக, ஆயுதப் படைகள் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது நான் செய்த நியமனங்களில், கட்டமைப்பு குறைபாடுகள் தோன்றவில்லை.

பின்னர், பாதுகாப்பு அமைப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பில் வெளிப்படையாக சிக்கல்களை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் இந்த சிக்கல்களைத் தீர்ப்பது மிகவும் தாமதமாகி விட்டது.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கும் இடையில் அதிக மூப்பு இடைவெளி இல்லை என்பது ஒரு பிரச்சினை.

இருவரும் போரின் போது டிவிசன்களுக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதிகளாக இருந்தனர். அவர்கள் தங்களை மேலானவர்கள் அல்லது கீழானவர்கள் அல்லது சமமானவர்களாகப் பார்த்தனர்.

இருவரும் நன்றாக பேசிக் கொள்கிறார்களா என்பதே சந்தேகமாக இருந்தது. இராணுவத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் சில சமயங்களில் எதிர்எதிர் நோக்கங்களுடன் செயற்பட்டனர். இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களை மதிக்கவில்லை.

இந்தக் காரணங்களால், நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, ஆயுதப் படைகள் மீது இருந்த கட்டுப்பாடு, கமல் குணரத்னவுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ.

தனக்கு எதிராக தோன்றி வந்த மக்கள் கிளர்ச்சியை கட்டுப்படுத்த தவறியதற்கு, இந்த முரண்பாட்டையும், புலனாய்வுத்துறையின் குறைபாட்டையும் முக்கிய காரணமாக முன்வைத்திருக்கிறார் கோட்டா. பதவி மூப்பு நிலை தான், இந்த நிலைக்கு காரணமான என்பது சந்தேகம்.

ஏனென்றால் 1981 இல் இராணுவத்தில் இணைந்து கொண்ட கமல் குணரத்ன, 1982இல் 2ஆம் லெப். அதிகாரியாக பணியைத் தொடங்கி, 2016இல் ஓய்வு பெற்றார்.

ஆரம்பத்தில் முதலாவது ரஜரட்ட ரைபிள்ஸ் படைப்பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷவுடன், இணைந்திருந்து, அந்தப் படைப்பிரிவு கஜபா ரெஜிமென்டாக மாற்றப்பட்ட போது, 1ஆவது கஜபா படைப்பிரிவின் ஆரம்ப நிலை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.

ஆனால் சவேந்திர சில்வா, 1984இல் இராணுவத்தில் இணைந்து கொண்டு, 1985 நவம்பரிலேயே கஜபா ரெஜிமெட்டின், 2ஆம் லெப். அதிகாரியாக இணைந்து கொண்டவர்.

இன்னமும், 60 வயதைப் பூர்த்தி செய்யாத அவர், 40 வருட இராணுவ சேவை பூர்த்தியை அண்மையில் கொண்டாடியிருக்கிறார்.

சேவைக்கால அடிப்படையில் கமல் குணரத்னவை விட, 3 வருடங்கள் சவேந்திர சில்வா, கனிஷ்ட நிலையில் இருந்தவர். அப்படியிருக்க மூப்பு நிலை பிரச்சினை எப்படி உருவானது?

அது இறுதிக்கட்டப் போரின் போது தேடிக்கொண்ட ஒரு முக்கியமான பிரச்சினை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு துடிப்பான, நம்பிக்கையுள்ள இளம் அதிகாரிகளை சரத் பொன்சேகாவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தெரிவு செய்தனர்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான், சவேந்திர சில்வா. கேணல் நிலையில் இருந்த அவர் பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டு 58 ஆவது டிவிசனின் தளபதி ஆக்கப்பட்டார். அப்போது அது அதிரடிப்படை 1 என்ற பெயரில் இயங்கியது.

அந்தப் படைப்பிரிவு, மன்னாரில் தொடங்கி, பூநகரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு வழியாக, முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னகர்ந்தது. போரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தப் படைப்பிரிவு தான்.

அப்போது இராணுவத்தின் உயர் சிறப்புப் படைப்பிரிவுகள் எனக் கருதப்பட்ட 53, மற்றும் 55 ஆவது டிவிசன்கள் முகமாலை, நாகர்கோவில் முன்னரண்களில் நிறுத்தப்பட்டிருந்தன.

அவற்றில் 55 ஆவது டிவிசனின் தளபதியாக இருந்தவர் தான், கமல் குணரத்ன.

அப்போது இரண்டு பேருமே பிரிகேடியர்களாக இருந்தனர்.

சவேந்திர சில்வாவின் டிவிசன் போர் முனையில் சிறப்பாக செயற்பட்டதால், ஒரு கட்டத்தில் 53, 55 ஆவது டிவிசின்களை விட அதுவே முதன்மையானதாக மாறியது.

அது, இராணுவக் கட்டமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை உயர்நிலையில் இருந்த அதிகாரிகள் உணர்ந்திருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஏனென்றால் சவேந்திர சில்வாவும் அவரது டிவிசனும் எட்டாத உயரத்துக்கு சென்று விட்டிருந்தனர். அவர்களை கீழ் இறக்கும், அல்லது சமப்படுத்தும் எந்த நடவடிக்கையை முன்னெடுத்தாலும் போர்முனையில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருந்தது.

போரின் கடைசிக் கட்டத்தில் முகமாலை- நாகர்கோவில் அரணில் இருந்து, புலிகளின் எதிர்ப்பின்றி முன்னேறிய 53, 55 ஆவது டிவிசன்கள், இறுதியான சில வாரங்கள் மட்டுமே சண்டையிட்டன.

இறுதிச் சண்டையில், கமல் குணரத்னவிடம், 53 ஆவது டிவிசனின் கட்டளைப் பொறுப்பும், 68 ஆவது டிவிசனின் தற்காலிக தலைமைப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரன், மரணத்தை தழுவியது, கமல் குணரத்னவின் கீழ் இருந்த, 68 ஆவது டிவிசன் படையினருடனான சண்டையில் தான்.

மன்னாரில் இருந்து, போரை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்த தனக்கு, பிரபாகரனை கொல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் சவேந்திர சில்வாவுக்கு இருந்தால் அது ஆச்சரியமில்லை.

போர் முடிந்த பின்னர், இருவரும், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டனர். வெளிநாடுகளில் துணைத் தூதுவர்களாக பணியாற்றும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவில் பணி வழங்கப்பட்டது. கமல் குணரத்னவுக்கு பிரேசிலில் பணி வழங்கப்பட்டது.

இரண்டு பேரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தாலும், சவேந்திர சில்வாவே, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளால் பயணத்தடைகளை எதிர்கொண்டார்.

கமல் குணரத்ன மேஜர் ஜெனரலாக ஓய்வு பெற்ற நிலையில், சவேந்திர சில்வா லெப். ஜெனரலாக இராணுவத் தளபதி பதவியில் இருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, அவரை பாதுகாப்புச் செயலாளராக நியமித்த போதும், இராணுவத் தளபதி அவருக்கு மேலான லெப். ஜெனரலாகவே பதவி வகித்திருந்தார்.

ஒரு வருடம் கழித்து, சவேந்திர சில்வாவை ஜெனரலாக பதவி உயர்த்திய கோட்டாபய ராஜபக்ஷ கூடவே கமல் குணரத்னவையும், ஜெனரலாக பதவி உயர்த்தினார்.

இந்தக் குழப்பங்கள் தான், பிரச்சினைகளுக்கு காரணம்.

தேவைப்பட்ட போது சவேந்திர சில்வாவை பயன்படுத்திக் கொண்ட கோட்டா, பின்னர் ஒரு கட்டத்தில், கமல் குணரத்னவை அவருக்கு மேலான, பாதுகாப்புச் செயலாளர் பதவி நிலையில் அமர்த்தியதுடன், ஜெனரல் பதவி உயர்வையும் வழங்கினார்.

இது, இருவருக்குள்ளேயும் முரண்பாட்டை தோற்றுவித்தது.

தனக்கு எதிரான போராட்டங்கள் வெடித்த போது, பாதுகாப்புப் படையினர், சரியான உத்தரவுகள் வழங்கப்படாததால், திணறியதாக கோட்டா சுட்டிக்காட்டுகிறார்.

மீரிஹானவில் உள்ள தனது இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட போது, கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் ஷங்ரில்லா விடுதியில் திருமண வரவேற்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர் என்று கோட்டா குறிப்பிட்டிருக்கிறார்.

“போராட்டம் குறித்து அறிவித்ததும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எனது வீட்டுக்கு வந்தார், அவர் அங்கிருந்து, கமல் குணரத்ன மற்றும் சவேந்திர சில்வாவுக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை காண்பித்தார்.

எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடைசியில் சுரேஸ் சாலே, கூட்டத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்” என்று கோட்டா தனது நூலில் கூறியிருக்கிறார்.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மாத்திரம், இந்த நிலைக்கு காரணம் இல்லை. அவர் நம்பி வளர்த்தவர்களும் கூட, அவரால் கைவிடப்பட்டனர் என்பதையும் இது உணர்த்துகிறது.

அதேவேளை, தொற்றுநோய் தொடர்பான கடமைகளில் புலனாய்வுத்துறை சிறப்பாகச் செயற்பட்டாலும், சமூக ஊடகங்களில் அரசியல் நோக்கம் கொண்ட குழுக்களை உருவாக்குவதை அவர்கள் முற்றிலும் கவனிக்கத் தவறவிட்டனர் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் கோட்டா.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு புலனாய்வு பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டு பாதுகாப்பு கட்டமைப்புகள் சீர்குலைந்து போனது தான் காரணம் என்று கூறி, தானே அதனை தன்னால் மட்டுமே சரிப்படுத்த முடியும் என்று வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்தவர் கோட்டா.

ஆட்சிக்கு வந்த பின்னர், புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மறுசீரமைத்து பலப்படுத்தி விட்டதாகவும், இனி யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் மார் தட்டினார்.

ஆனால் இப்போது அவரே, தன்னைப் பதவியில இருந்து அகற்றும் சதித் திட்டத்தின் போது. புலனாய்வுப் பிரிவு சரியாக செயற்படவில்லை என்றும், பாதுகாப்பு கட்டமைப்பு குறைபாடுகள் இருந்தன என்றும் கூறியிருக்கிறார்.

அதைவிட அவர் கூறியிருக்கும் இன்னொரு விடயம் பாரதூரமானது.

ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் வெளிநாட்டுத் தூதரகங்களின் ஊழியர்களுடன் மேற்கொள்ளும் தொடர்புகளைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மட்டுப்படுத்தவும் கடுமையான நெறிமுறைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.” என்று அவர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம் என்ன?

இலங்கையின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்பட்டுள்ளனர் என்பதேயாகும்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜபக்ஷவினரின் நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்க,

“கோட்டாவின் அருகில் இருந்த கமல் குணரத்ன, சவேந்திர சில்வா, பி.பி.ஜயசுந்தர, லலித் வீரதுங்க, ஜயநாத் கொலம்பகே, மிலிந்த மொரகொட, நிசங்க சேனாதிபதி ஆகியோர் அமெரிக்காவின் சதிவலையில் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் தான் கோட்டாவை கஷ்டத்தில் தள்ளினர். ராஜபக்ஷர்களுக்கு இடையில் விரிசல்களை ஏற்படுத்தியதற்கும் இவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும்.

கோட்டாவை தனிமைப்படுத்துவதே இவர்களது இலக்காக இருந்தது.

சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரத்ன தொடர்பிலான சில உண்மைகளை கோட்டா இந்த புத்தகத்தில் எழுதவில்லை. அமெரிக்கா மீதான பயத்தின் காரணமாகவே அவர் சில உண்மைகளை இதில் வெளியிடவில்லை.” என்று கூறியிருக்கிறார்.

இவரது கருத்து உண்மையாயின், கோட்டாவைச் சுற்றி உருவாக்கப்பட்ட விம்பம், வெறும் மாயை என்பது தானே உண்மை.

சுபத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக