திங்கள், 18 மார்ச், 2024

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு

தினத்தந்தி :  பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பையும் திரும்பப் பெறப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார்.பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வெளிவராத நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், அங்கு பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அமைச்சராக பொன்முடியை கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? என்ற சந்தேகமும், சட்டச்சிக்கலும் எழுந்தது.

இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் கவர்னர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், சுப்ரீம் கோர்ட்டு தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது; குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை; திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தீர்ப்பு தந்திருக்கலாம். பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என கவர்னர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக