சனி, 23 மார்ச், 2024

சென்னை கால்டாக்சி ஓட்டுனரை முகத்தில் அடித்து கொலை செய்த போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள்! கைது

tamil.oneindia.com  -  Mani Singh S  :  ஓங்கி ஒரே குத்து.. துடிதுடித்து பலியான சென்னை கால்டாக்சி ஓட்டுனர்.. மதுரவாயல் ஹெட் கான்ஸ்டபிள் கைது
சென்னை: சென்னை மதுரவாயல் தலைமை காவலர் மார்பு பகுதியில் தாக்கியதில்,சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். கால் டாக்சி ஓட்டுனர். ராஜ்குமார் நேற்று முன் தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
Call taxi driver dies in Maduravoyal after police attack him Head constable arrested

அப்போது கால் டாக்சி ஓட்டுனர் ராஜ்குமார் ஒரு பெண்ணுடன் நின்றுகொண்டு இருப்பதை பார்த்து அவரிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜ்குமாருக்கும் தலைமை காவலர் ரிஸ்வானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில், தலைமை காவலர் ரிஸ்வான் ராஜ்குமாரை மார்பு பகுதியில் ஓங்கி குத்தியதாக தெரிகிறது.

இதில், ராஜ்குமார் வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து ராஜ்குமாருடன் இருந்த பெண் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மயங்கி விழுந்து கிடந்த ராஜ்குமாரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராஜ்குமாரின் சகோதரர் போலீஸ் தாக்கியதாலேயே தான் ராஜ்குமார் உயிரிழந்ததாக கூறினார்.மேலும் இதுதொடர்பாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர் ரிஸ்வான் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரிஸ்வானை விசாரித்து வந்தந்து. இந்த நிலையில், ரிஸ்வான் தாக்கியதாலேயே ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரிஸ்வானை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமை காவலர் ரிஸ்வான் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் போலீசார் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் கால் டாக்சி ஓட்டுனர் ராஜ்குமாருடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், இதன் பிறகே ராஜ்குமார் எப்படி உயிரிழந்தார் என்ற முழு விபரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமை காவலர் தாக்கியதில் கால் டாக்சி டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக