ஞாயிறு, 24 மார்ச், 2024

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

thesam .நெட்  arulmolivarman :  லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!!
வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது.
அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.



இச்சம்பவம் பற்றி வட்பேர்டில் வதியும் சபாரட்ணம் அருள்சிகாமணியின் நண்பரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தனக்கு அருள்சிகாமணியை ஒரு குடும்பபொறுப்பானவராகவே தெரியும் என்றும் ஊரிலிருந்த தன்னுடைய உறவுகளுக்கு உதவிவந்ததாகவும் அவர்களை வெளிநாட்டுக்கும் அழைத்து அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நண்பர் தெரிவித்தார். அந்நண்பர் மேலும் தெரிவிக்கையில் அருள்சிகாமணி இவ்வாறான ஒரு செயலைச் செய்தமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வட்டூர் தமிழர் ஒன்றியம் யூகே இன் செயலாளராக இருந்த அருள்சிகாமணி 2018இல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, அருள்சிகாமணியின் நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அருள்சிகாமணி வட்டுக்கோட்டை வட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட போதும் அவர் பெரும்பாலும் வாழ்ந்தது வட்டக்கச்சி, கிளிநொச்சியில் என்கிறார் அருள்சிகாமணியின் ஊரவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் தந்மையுமான அருள்சிகாமணி க்கு வேறொரு பெண்ணோடு உறவு இருந்ததாகவும் தெரிவித்தார். அருள்சிகாமணியின் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கின்றார். தந்தையரின் இத்தகாத செயல்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அந்நண்பர்.

இதேபோன்று பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பிள்ளைகளும் மிகுந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானிய ஆலயங்களுடன் நெருங்கிப் பணியாற்றிய பிரேமகுமார் ஆனந்தராஜாவின் தண்டனையைக் குறைக்க பிரித்தானிய சைவக் கோயில்கள், பக்தர்கள், அறிவுஜீவிகள் 40க்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி தண்டனையைக் குறைக்கக் கோரிய போதும் அவருக்கு பின் தண்டனை அதிகரிக்கப்பட்டமையை தேசம்நெற் வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாரைத் தொடர்ந்து அவரோடு ஓரே வகுப்பில் கல்வி கற்ற சுப்பிரமணியம் சதானந்தனும் பெண்குழந்தையின் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறைத்தண்டனை பெற்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மூன்று பாலியல் துஸ்பிரயோகக் குற்றவாளிகளும் லண்டனின் ஹரோ – வெம்பிளிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. சபாரட்ணம் அருள்சிகாமணி வட்பேர்ட்டில் தற்போது வாழ்ந்தாலும் இவரும் ஹரோவில் நீண்டகாலம் வாழ்ததாக அவருடைய நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். நேரடியான உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்கள் நிகழும் அதே சமயம் சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில ஆண்கள் சமூக வலைத்தளங்களை பெண்களுக்கு ஆபத்தானதாக மாற்றியிருப்பது தமிழ் சமூகத்தின் பிரச்சினை என்கிறார் தாயகம் மட்டக்களப்பைச் சேர்ந்த நளினி ரட்னராஜா. மகளீர் தினத்தையொட்டி அவர் தேசம்நெற்குக்கு வழங்கிய நேர்காணலில் நல்ல குடும்பச் சுழலில் இருந்து வராத ஆண்கள், பாலியல் வறட்சி கொண்டவர்கள் அதனால் வக்கிரமொழிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

லண்டன் ஹரோ வெம்பிளி பகுதியில் வாழ்கின்ற பார் உரிமையாளர் ரரின் கொன்ஸ்ரன்ரைன், புலிகளின் கோயிலாக இருந்ததை வெற்றிகொண்ட வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் போன்றோர் தங்களோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பெண்களைப் பற்றிய அவதூறுகளை பரப்புவதுடன் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் பாலியல் உறுப்புகள் பற்றியும் இவர்கள் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அங்கம்பெறும் சமூகவலைத்தளங்களிலேயே இதனைச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்ததாகவும் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு புலத்திலும் தாயகத்திலும் நெருக்கடிகளை உண்டுபண்ணும் வகையில் பதிவுகளை கடந்த சிலமாதங்களாகவே பகிர்த்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்கிறீர்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணியின் பாலியல் துஸ்பிரயோகத்தை விசாரணை செய்த புலனாய்வுக்குப் பொறுப்பான சார்ஜன்ட் மார்க் வில்மோர் இவ்வழக்குப் பற்றிக் குறிப்பிடுகையில்: “எனது குழு அண்மைக்காலத்தில் நடக்காத பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கின்றோம். சம்பவம் நடந்த போது பல்வேறு காரணங்களுக்காக அன்று அவர்கள் தங்களுக்கு நடந்ததை பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம், குற்றம் எப்போது நடந்திருந்தாலும் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடந்திருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளைத் தீர விசாரிப்போம். பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாவது என்பது ஒரு போதும் உங்களுடைய தவறு அல்ல. நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இந்த விசாரணைக் காலகட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தாலோ அவ்வாறாக பாதிக்கப்பட்டது பற்றி அறிந்திருந்தாலோ பொலிஸ்க்கு உடனடியாகத் தொடர்புகொள்ளவும். “ எனக் கேட்டுக்கொண்டார்.

இதே லண்டன் ஹரோ – வற்போர்ட் பகுதியில் மற்றுமொரு போலிச்சாமியாரின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. லைக்கா சாமியார் என்று லண்டனில் பிரபல்யமான லைக்கா துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமியின் ஆதரவு பெற்ற ஓம் சரவணபவ என்ற கேரளாவைச் சேர்ந்த புலிக்கள் முரளிகிருஷ்ணன் என்ற ஆசாமி லண்டனில் தமிழர்களின் பணத்தை உண்டியல் இல்லாமலே அள்ளி எடுத்தார். அவரை வீட்டுக்கு கூப்பிட்டு பாத பூஜை செய்தால் அந்த வீட்டு நட்புகள், உறவுகள் எல்லாம் வந்து பணத்தை விசுக்க ஒரு விசிற்றுக்கு ஓரிரு மணித்தியாலத்தில் இலங்கை ரூபாயில் ஒரு கோடி வசூலாகும். பாத பூஜை என்ற பெயரில் இந்த ஆசாமியின் காலைக் கழுவிக்குடிக்கும் பழக்கத்தை தற்போது தாயகத்திலும் பழக்கியுள்ளனர். இந்தப் போலி ஆசாமியை நைநாதீவுக்கு அழைத்து வந்து காலைக் கழுவிக்கு குடிக்க வைத்த கஜன் தற்போது மீண்டும் தாயகம் வந்தள்ளார்.

இளம்பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு லைக்கா பிரேமின் பெயிலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள புலிக்கள் முரளிகிருஸ்ணன் கோஸ்டி தாயகத்தில் வீடுகட்டிக் கொடுக்கிறோம் என்ற பாணியில் புது லைன் ஓடுகின்றனர். லண்டன் வற்போர்டில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நடக்க இருக்கின்ற சமயம் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி லண்டன் வறட்போர்டில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள இந்த பாலியல் குற்றம்சுமத்தப்பட்ட ஆசாமி புலிக்கள் முரளிகிருஷ்ணனை வீட்டின் முகப்புச் சுவரில் பதித்து அந்த ஆசாமியைக் கடவுளாக்கும் கைங்கரியத்தை கஜன் என்பவரும் அவரது நண்பரும் மேற்கொள்கின்றார்கள். இந்தப் போலிக்கடவுளர்கள் பணம் கொடுத்தாலென்ன, வீடுகள் கட்டிக்கொடுத்தாலென்ன அதனை மறுக்காமல் தாயக மக்கள் வாங்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுடைய சொந்தப் பணம் கிடையாது. பிரித்தானியத் தமிழர்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளையிட்ட பணம். அது தாயக மக்களுக்குச் சேரவேண்டிய பணம். ஆனால் அந்த வீடுகளில் உள்ள பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஆசாமியின் உருவப் படத்தை மாட்டாதீர்கள். அதனை உடைத்துவிட்டு உங்கள் மதிப்புக்குரியவர்களின் உருவப்படத்தை பதித்துவிடுங்கள்.

சபாரட்ணம் அருள்சிகாமணிக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டதுடன் ஆயுள் காலத்துக்கும் அவர் பாலியல் குற்றவாளி என்ற பட்டியலிலும் இவரது பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புலிக்கள் முரளிகிருஷ்ணனின் வழக்கு விரைவில் பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் புலம்பெயர்நாடுகளில் கோயில்கள் என்ற பெயரில் பெரும் உண்டியல் வியாபாரம் நடைபெறுகின்றது. கோயில்களை வைத்து வீடுகட்டுகிறோம் என்று சொல்லி படத்துக்கும் யூரியூப்புக்கும் எவ்விதிகுறைவுமில்லை. உண்டியல் பணத்தில் சாத்திரத்துக்கு வீடும் மிகுதியில் காம விடுதிகளும் அந்தப்புரங்களும் கட்டப்படுகிறது. இவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலேயே பெண்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. இனி தாயகத்தில் கேட்கவா வேண்டும். கோயில் ஆசாமிகள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக