சனி, 23 மார்ச், 2024

ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலில் 93 பேர் பலி, 11 பேர் கைது; முன்பே எச்சரித்த அமெரிக்கா – என்ன நடந்தது?

BBC Tamil :  மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த “பயங்கரவாத தாக்குதலை” கடுமையாக கண்டனம் செய்துள்ளது.

இணையத்தில் பரவிவரும் சரிபார்க்கப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் குறித்து முன்பே எச்சரித்த அமெரிக்கா

மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல்

இதுகுறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஐஎஸ் அமைப்பு ரஷ்யாவை தாக்க உள்ளது என உளவுத் தகவல் கிடைத்ததாகக் கூறினர்.

மேலும், மாஸ்கோவில் “பெரிய கூட்டங்களை” குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக சம்பவ இடத்தில் சிறப்புப் பிரிவுகள் செயல்பட்டு வருவதாக ரஷ்யாவின் தேசிய காவல் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய உயர் அதிகாரிகளும் கிராஸ்னோகோர்ஸ்க்கு சென்றுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, “தீவிரவாதிகள் மாஸ்கோவில் பெரிய கூட்டங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளனர்,” என்ற தகவல் குறித்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்தது.

பின்னர் வெள்ளிக்கிழமை மாலை தனது அறிவிப்பைப் புதுப்பித்து வெளியிட்ட அமெரிக்கா, தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.

குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்காக 6,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார்.

அதேநேரம் இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தற்போது வரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரடியாக மக்களிடம் பேசவில்லை. ஆனால், அவரது அலுவலகத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி, பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெறத் தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது நுழைவுவாயில் ஒன்றில் பணியில் இருந்த காவலர் ஒருவர், எப்படி இந்த வன்முறை கும்பல் ஆயுதங்களோடு அரங்கிற்குள் நுழைந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

“அங்கு மூன்று பாதுகாவலர்கள் இருந்தனர். தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் ஒரு விளம்பரப் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டனர்,” என்று அவர் ரஷ்ய டெலிகிராம் சேனலான பாசாவிடம் கூறியுள்ளார்.

மேலும் “தாக்குதல் மேற்கொண்ட அந்த நபர்கள் எங்களிடமிருந்து 10 மீ [30 அடி] தொலைவில் நின்றுகொண்டு, தரைத் தளத்தில் இருந்தவர்களை நோக்கி கண்முன் தெரியாமல் சுடத் தொடங்கினர்,” என்று தெரிவித்துள்ளார் அவர்.

அரங்கின் உள்ளே இருந்த பெண் ஒருவர், தானும் மற்ற பார்வையாளர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை உணர்ந்தவுடன், மேடையை நோக்கி ஓடியதாக ரஷ்ய தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார் .

“அங்கிருந்த ஸ்டாலில் ஒரு நபரை ஆயுதத்துடன் பார்த்தேன். அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ஒலிபெருக்கியின் பின்னால் மறைந்தவாறு செல்ல முயன்றேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் குழந்தைகளும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் இரண்டு மேல்தளங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் முகப்புப் பகுதி தீயில் சிக்கிக்கொண்டது. இதன் விளைவாக எழுந்த புகை வானத்தில் பரவத் தொடங்கியது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீசிய ஒருவகை நெருப்பு உண்டாக்கும் கருவியின் விளைவாகவே தீ பற்றியதாகத் தெரிய வந்துள்ளது.

இசைநிகழ்ச்சி அரங்கில் பால்கனியில் இருந்த விட்டலி தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் பார்த்துள்ளார். இதுகுறித்து விவரித்த அவர், “அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அனைத்தும் எரிய ஆரம்பித்தன. நாங்கள் வெளியேறும் வழியை நோக்கி ஓடத் தொடங்கினோம்,” என்றார்.

தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் நடைபெற்ற பால்ரூம் நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரங்கில் இருந்தவர்களில் சிலர் மேடையில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு தப்பிச் செல்ல முடிந்தது. மற்றவர்கள் மேல்பகுதிக்குச் சென்றனர். மேலும் 100 பேர் கட்டடத்தின் அடித்தளத்தின் வழியாக தப்பிச் சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டஜன் கணக்கான அவசர ஊர்திக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக