செவ்வாய், 26 மார்ச், 2024

மாலத்தீவு போல வங்கதேசத்திலும் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் -

இந்தியா vs வங்கதேசம்

bbc.com : மாலத்தீவைத் தொடர்ந்து வங்கதேசத்திலும் 'இந்தியா அவுட்' முழக்கம் - என்ன பிரச்னை?
மாலத்தீவைத் தொடர்ந்து, வங்கதேச அரசியலிலும் இந்தியா குறித்த விவாகரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆளும் அவாமி லீக் மற்றும் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையே அரசியல் ரீதியாக கடும் விவாதம் நடந்து வருகிறது.


இந்த விவாகரம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
'இந்தியாவே வெளியேறு' என்று சொல்லப்படும் பிரசாரம் அல்லது இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பது என்கிற முழக்கம் , ஒரு சில எதிர்க்கட்சிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அது வைரலாகி வருகிறது.

இந்த பிரசாரத்தை எதிர்க்கும் பலரும், இது வழக்கமான இந்திய எதிர்ப்பு அரசியலின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், “இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் கோஷத்தின் நோக்கம், சந்தையை சீர்குலைத்து பொருட்களின் விலையை உயர்த்துவதே ஆகும்” என்று கூறியுள்ளார்.

ஆனால், அனைத்து இந்திய தயாரிப்புகளையும் புறக்கணிப்பதன் மூலம் வங்கதேச சந்தையை அப்படியே வைத்திருக்க முடியுமா? என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

அதேசமயம், பி.என்.பி. கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் கயேஷ்வர் சந்திர ராய், இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், பொதுமக்களிடையே உள்ள கோபத்தால்தான் இந்தியப் பிரச்னை அரசியல் விவாதமாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.


தேர்தல்கள் எந்த பாதுகாப்புமே இல்லாமல் இந்தியாவால் செயல்படுத்தப்படுகிறது என்கிறார் பிஎன்பி கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் கயேஷ்வர் சந்திர ராய்

இது குறித்து பிபிசி வங்கதேச பிரிவிடம் பேசிய அவர், "உண்மையில் தேர்தல்கள் எந்த பாதுகாப்புமே இல்லாமல் இந்தியாவால் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மக்களால் வாக்களிக்க முடியவில்லை அல்லது அவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிபோகிறது. இது மக்களிடம் வெறுப்பை உருவாக்கியுள்ளது. பி.என்.பி. கட்சியால் மக்களின் வெறுப்பை அகற்ற முடியாது" என்று கூறுகிறார்.

மறுபுறம் பிபிசியிடம் பேசிய அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும் ஜவுளி மற்றும் சணல் துறை அமைச்சருமான அப்துர் ரஹ்மான், "இது பிஎன்பியின் இந்திய எதிர்ப்பு அரசியலின் தொடர்ச்சி என்றும், அவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக இதைச் செய்தாலும், மக்கள் அதை நிராகரித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்தியப் பிரச்சினையில் பி.என்.பி.யும் அவாமி லீக்கும் ஏன் முரண்படுகின்றன?

டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆசிரியையுமான ஜோபைடா நஸ்ரீன், இந்தியா மீதான பி.என்.பி மற்றும் அவாமி லீக்கின் நேரெதிரான அறிக்கைகளுக்கான காரணங்கள் பற்றி பிபிசியிடம் பேசினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பி.என்.பி.யோ அல்லது அதை போன்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் மற்றும் தலைவர்களோ இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பது அல்லது இந்தியாவை எதிர்க்கும் போது, அவாமி லீக் கட்சி அரசியல் காரணங்களுக்காக இந்தியாவின் பங்கை நியாயப்படுத்த முயற்சி செய்கிறது” என்று கூறுகிறார்.

வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான பி.என்.பி. இந்தியாவை எதிர்ப்பது வரலாற்றில் இது ஒன்றும் புதிதோ அல்லது முதல்முறையோ அல்ல.

ஆனால் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில், பல்வேறு சமயங்களில் இதே கட்சியின் ஒரு பிரிவினர் இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், சில சமயங்களில் கட்சியின் இந்தியாவுக்கு எதிரான குழு பலமாகி, ஆதரவு குழுவின் முயற்சிகளை சீர்குலைத்து விட்டது.

இதற்கு முக்கிய உதாரணமாக, 2013ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டாக்கா சென்றிருந்த போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.என்.பி. தலைவர் கலீதா ஜியா அந்தக் கூட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்ததை பலரும் குறிப்பிட்டு சொல்கின்றனர்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோதி டாக்கா சென்ற போது அவரை ஹோட்டலில் வைத்து சந்தித்தார் ஜியா என்பதும் வரலாறு.

2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை பி.என்.பி புறக்கணித்த போதிலும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்பு இந்திய அதிகாரிகளின் தொடர் செயல்பாடு அங்கு தென்பட்ட போதிலும், பி.என்.பி அதைப் பற்றி அதிகம் பேசவில்லை.

ஆனால், 2018 தேர்தலுக்குப் பிறகு, பிஎன்பி இந்தியாவின் பிரச்னையை நோக்கி நகர்வதை போல் தெரிந்தது. 2019ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்தியப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பி.என்.பி. போராட்டத்தில் இறங்கியது.

வங்கதேச சுதந்திரத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்காக 2021ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி டாக்கா வருவதை எதிர்த்து வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. இது இந்தியாவுக்கும், பி.என்.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி விட்டதாக பலரும் நம்புகின்றனர்.

கானா ஓதிகார் பரிஷத் தலைவர் நூருல் ஹக் நூர், தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே இந்தியாவை புறக்கணிக்கும் குரலை முதலில் எழுப்பினார்.

12வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, பி.என்.பி., இந்தியாவின் பங்கு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது.

இந்தியாவின் பிடிவாதமான அணுகுமுறையால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காக அவாமி லீக் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கொடுத்த அழுத்தம் நீர்த்துப்போய் விட்டது என்று பி.என்.பி கட்சியின் தலைவர்கள் நம்புகின்றனர்.

பி.என்.பி நிலைக்குழு உறுப்பினர் கயேஷ்வர் சந்திர ராய் பேசுகையில், “தேர்தல் வந்த உடனே இந்திய தலைவர்கள் செயல்பட தொடங்கி விடுகிறார்கள். இந்நிலையில் நான்கு தேர்தல்களாக வாக்களிக்க முடியாமல் இருப்பதால் மக்கள் மனதில் கோபம் எழுந்துள்ளது. அந்த கோபமே மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. மக்கள் இயக்கத்தை தடுப்பது ஒன்றும் பி.என்.பியின் வேலை இல்லை" என்று கூறுகிறார்.

கானா ஓதிகார் பரிஷத் தலைவரும், டாக்கா மத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் துணைத்தலைவருமான நூருல் ஹக் நூர், தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே இந்தியாவை புறக்கணிக்கும் குரலை முதலில் எழுப்பினார்.

அதன் பிறகே, 'இந்தியா அவுட்' இயக்கம் அல்லது இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் இயக்கம் தொடங்கியது. மார்ச் 21 அன்று, பிஎன்பி செய்தித் தொடர்பாளரும், மூத்த இணைச் செயலாளருமான ருஹுல் கபீர் ரிஸ்வி இந்த இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் ஒரு நிகழ்வில், பி.என்.பி கட்சி எந்த அரசியல் பிரச்னையும் இல்லாமலேயே, இந்தியாவை எதிர்க்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

“பாகிஸ்தான் காலகட்டத்தில் இருந்தே எந்த விதமான அரசியல் பிரச்னையும் இல்லாமல் அவாமி லீக்கிற்கு எதிராக இதே பிரச்னை கொண்டு வரப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது முன்பு பங்கபந்துவுக்கு எதிராக இருந்தது, இப்போது ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உள்ளது. அதுதான் இந்திய எதிர்ப்பில் உள்ள பிரச்னை" என்று கூறினார் அவர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம்

முன்னதாக, மார்ச் 16 அன்று சமூக ஊடகங்களில் வெளியான 'இந்தியா அவுட்' பிரசாரத்தை குவாடர் விமர்சனம் செய்திருந்தார்.

அப்போது அவர், "இந்தியாவுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் முயற்சிகள் ஏன்? தேர்தலில் பங்கேற்காதவர்கள் இந்தப் பிரசாரத்தை கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவாமி லீக் ஆட்சியில் உள்ள போது, இந்தியாவுக்கு எதிரான குழு இணைந்து கொள்கிறது. இந்த நேரத்தில் பிஎன்பி இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது." என்று கூறியிருந்தார்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் இதுகுறித்துப் பேசினார்.

அந்த சந்திப்பில், "இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கிறோம் என்ற போர்வையில், நாட்டின் சந்தை அமைப்பை சீர்குலைக்கும் ஆழமான சதியில் பி.என்.பி. ஈடுபட்டுள்ளது. பி.என்.பி.யின் வேண்டுகோளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார் அவர்.

மறுபுறம், பி.என்.பி துணைத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஹபீசுதீன் அகமது, “இன்னொரு நாட்டிடம் மண்டியிடும் வெளியுறவுக் கொள்கையே தற்போதைய ஆளும் கட்சியின் வழக்கமாக உள்ளது. டெல்லி எங்கு உள்ளதோ, அவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். இதை சொல்வதில் அவாமிக்கு வெட்கமே இல்லை" என்று விமர்சித்தார்.

பிபிசியிடம் பேசிய கயேஷ்வர் சந்திர ராய், "பி.என்.பி. எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல, ஆனால் தேசியவாத அரசியலுக்குத் தேவையானதைச் செய்யும். ஒவ்வொரு முறையும் இந்தியா நம் நாட்டின் தேர்தல்களில் தீவிரமாக தலையிட்டு, மக்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது. எனவே மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். நாம் ஏன் அதைத் தடுக்க வேண்டும்?" என்று கூறினார்.

மறுபுறம், “ஒரு தீய சக்தி திடீரென இந்தியாவுக்கு எதிரான பிரச்னையை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அதை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்” என்று அமைச்சர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் ஜனநாயகத்தின் நலன் கருதி, இந்தியா உட்பட அனைத்து கூட்டாளி நாடுகளும் 12வது நாடாளுமன்றத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த உதவி செய்துள்ளன என்று கூறினார்.

வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,

வங்கதேச அரசியலில் இந்தியா எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆசிரியையுமான ஜுபைதா நஸ்ரீன்

சர்ச்சைக்கான காரணம் என்ன?

டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளரும் ஆசிரியையுமான ஜுபைதா நஸ்ரீன், வங்கதேச அரசியலில் இந்தியா எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே தற்போதைய சூழ்நிலையிலும் இந்தியாவுக்கு பங்கு உண்டு என்று கூறுகிறார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், " பி.என்.பி. மற்றும் அதை ஒத்த சித்தாந்தம் கொண்ட எந்தவொரு கட்சியும் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கவோ அல்லது இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதற்கோ முற்படும் போது, அரசியல் காரணங்களுக்காக அவாமி லீக் பதிலளிக்க வேண்டியுள்ளது" என்கிறார்.

அவரது கருத்துப்படி, இரண்டு கட்சிகளின் அரசியலிலும் இந்தியாவுக்கு செல்வாக்கு உள்ளது.

"இந்தப் பிரச்னையில் பொதுமக்களின் உணர்வுகளை பி.என்.பி தூண்டும் நிலையில், இந்தியாவுடன் நல்லுறவில் இருக்கும் புள்ளியில் இருந்து அவாமி லீக் அதற்கு ஆதரவாக பேச வேண்டிய தேவை உள்ளது”

“இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் அவாமி லீக் கட்சிக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விட நினைக்கிறது பி.என்.பி. இதுவே அவாமி லீக் தரப்பிலிருந்தும் எதிர் தாக்குதல்கள் வருவதற்கு காரணம்”
வங்கதேசம்

“இந்திய தேர்தலில் பங்களாதேஷுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. ஆனால் நரேந்திர மோதி மீதான வெறுப்பு பிஎன்பியில் அதிகரித்துள்ளது.” என்கிறார் ஜுபைதா நஸ்ரீன்

எதுவாகினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஜுபைதா நஸ்ரீன் நம்புகிறார்.

“இந்திய தேர்தலில் வங்கதேசத்திற்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை. பி.என்.பி மற்றும் அவாமி லீக் இடையேயான பேச்சுவார்த்தையும் அவர்களுக்கு முக்கியமல்ல. ஆனால் நரேந்திர மோதி மீதான வெறுப்பு பி.என்.பி.யில் அதிகரித்துள்ளது.”

எனவே, "இந்தியத் தேர்தலை மனதில் வைத்து, வங்கதேசத்தில் மோதிக்கு எதிரான உணர்வை மேலும் தூண்டுவதற்கு எதிர்க்கட்சிகள் வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கலாம். அதனால்தான் அரசியல் அரங்கில் இந்தியாவின் பிரச்னை உச்சத்தில் உள்ளது" என்கிறார் ஜூபைதா.

சமூகவலைத்தளங்களில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம்
இங்கே, பி.என்.பி மற்றும் அவாமி லீக்கின் பிரச்னைகளுக்கு இடையில், முகநூலில் இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்ற குழுவை உருவாக்கி ஒரு அணி இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த குழுவில் உள்ள இர்பான் அகமது என்ற நபர், "உள்ளூர் பொருட்களை வாங்கி, இந்திய பொருட்களை புறக்கணித்துள்ளேன்" என்று எழுதியுள்ளார்.

அகமது இம்ரான் என்ற மற்றொரு நபர், "மக்கள் எங்கு செல்வார்கள், எங்கு சாப்பிடுவார்கள், எங்கு சிகிச்சை பெறுவார்கள் என்பதில் ஏன் இவ்வளவு குழப்பம்?”

“இந்தியா உலகிலேயே இயற்கை அழகு கொண்ட ஒரு நாடு. ஒரு அண்டை நாடாக உங்களால் மிகக் குறைந்த கட்டணத்தில் அங்கு பயணம் செய்ய முடியும். ஒருசிலர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக