செவ்வாய், 26 மார்ச், 2024

கடனாளியிடம் வசூலித்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகளிடம் இழந்த நிதி நிறுவன ஊழியர்

 மாலைமலர் : சாத்தூர்   தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தூர் அரசினர் தொழிழ் பயிற்சி மைய உதவி பயிற்சி அலுவலர் சஞ்சய்காந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி விளக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிச்சைமணி (வயது 25) என்பதும், இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் ஏஜெண்டாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.



இதையைடுத்து இவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதே போன்று கோபாலபுரம் பகுதியில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணுசங்கர் (35) என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் உரிய ஆவணம் இன்றி இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக