செவ்வாய், 26 மார்ச், 2024

இளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிகோரி வழக்கு: நீதிபதி விலகல்!


மின்னம்பலம் - Selvam   :   இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி எக்கோ நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் இன்று (மார்ச் 25) விலகியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500-க்கும் அதிகமான பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்த காலம் முடிந்தபிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ மற்றும் அகி நிறுவங்களுக்கு எதிராக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்ற பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்தநிலையில், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், தயாரிப்பாளர்களிடம் இருந்து தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனவே, இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையிலிருந்து தான் விலகி கொள்வதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார். அதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி பட்டியலிட வேண்டும், தலைமை நீதிபதி ஒப்புதலை பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக