வெள்ளி, 1 மார்ச், 2024

ஜாபர் சாதிக் பின்னணியில் இருந்த போதைப்பொருள் கும்பல்

 மாலைமலர் : சென்னை டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது.
தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.
இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். சினிமாவிலும் தடம் பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஜாபர் சாதிக் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

இப்படி சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.

இதையடுத்து சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் இருந்து வந்திருந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர். அதில் கடந்த 26-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் ஜாபர் சாதிக் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை. தலைமறைவாக உள்ள ஜாபர்சாதிக்கை கைது செய்ய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். ஜாபர் சாதிக்கின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்? என்பது பற்றிய பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள்.

ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார். இதை நம்பியே அவருடன் பலர் நெருக்கம் காட்டி உள்ளனர். ஏற்றுமதி தொழிலில் நல்ல வருமானம் வருவதாகவும் அதை வைத்தே சினிமா படம் எடுப்பதாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டே கோடிகளில் புரண்டிருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இதனால் அவரோடு நெருங்கி பழகி வந்த அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தமிழக பிரிவை சேர்ந்த அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாபர் சாதிக்கின் முழு பின்னணியையும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றிய விவாதங்கள் தெரிய வந்ததும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக