வெள்ளி, 1 மார்ச், 2024

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

 thinakkural.lk சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை
இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.
அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.


அவரின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனை இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது ஏன் என தமிழக அரசிடம் வினவியுள்ளது.

சாந்தனை கடந்த 27 ஆம் திகதி எயார் அம்பியூலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருந்த போதே, இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால், அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. விரைவில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தான் நேற்று சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக