சனி, 23 மார்ச், 2024

கெஜ்ரிவால் கைது.ஜெர்மனி கண்டனம்! . ஜெர்மன் வெளியுறவு துறை அறிக்கை! பாஜக அதிர்ச்சி

tamil.oneindia.com  --  Vigneshkumar   :  டெல்லி: கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அதற்கு இந்தியா இப்போது எதிர்வினையாற்றி உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்குக் கைதுக்கு எதிராக ஜெர்மனி சில கருத்துகளைக் கூறி இருந்தது.
இதற்கிடையே ஜெர்மன் தூதரகத்தின் மூத்த தூதரக அதிகாரிக்குச் சம்மன் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். கெஜ்ரிவால் வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என்று நம்புகிறோம் என்பது போல கருத்து கூறியிருந்தார்.

ஜெர்மனி: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ".குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அனைவரையும் போலவே கெஜ்ரிவால் மீது நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த வேண்டும். அவர் குற்றமற்றவர் என்ற கோணத்தில் இருந்து விசாரணை நடத்துவதே சட்டத்தின் படியான விசாரணையின் அடிப்படையாகும்" என்று கூறியிருந்தார்.

டெல்லி முதல்வர் கைதுக்கு ஜெர்மனி இதுபோல கருத்து கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியது. பொதுவாக மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் கருத்துச் சொல்லாது. அப்படி இருக்கும் போது கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி இதுபோல கருத்து கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் இந்த கருத்துக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது.

பதிலடி: ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலருக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும், ஜெர்மனியின் கருத்து இந்தியாவின் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவது போல இருப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.

"கெஜ்ரிவால் கைது ஏன்.." வந்து விழுந்த கேள்வி.. 2 நொடி கேப் விட்டு அன்னா ஹசாரே சொன்ன பதில் இதுதான்!

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லியில் உள்ள ஜெர்மன் துணைத் தூதருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. ஜெர்மனி செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களுக்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற கருத்துக்கள் நமது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், நமது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவே பார்க்கிறோம்.

சட்டப்படி ஆட்சி: இந்தியா சட்டத்தின்படி ஆட்சி செய்யும் வலுவான ஜனநாயக நாடு.. நாட்டில் உள்ள வழக்குகளைப் போலவே இதிலும் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படும். இந்த விவகாரத்தில் ஒருபக்கச் சார்பும் தேவையற்ற அனுமானங்களும் தேவையற்றவை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்தது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தது. கைதுக்குத் தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுத்த நிலையில், சில மணி நேரத்தில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெல்லியில் கடந்த 2021-22இல் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், சில தனியார் நிறுவனங்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்கிறது என்பதே புகாராகும்.இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, பிஆர்எஸ் கட்சியின் கவிதா ஆகியோர் ஏற்கனவே சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக