சனி, 23 மார்ச், 2024

தோழர் அருண் சித்தார்த் - இலங்கை தமிழர்களின் சுயமரியாதை குரல்!

 Vijaya Baskaran  : யாழ்ப்பாண பரபரப்பு
யாழ் மாவட்ட ஐ தே க அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டார்.இங்கே அருண் சித்தார்த் ஐ தே க வில் சேர்ந்தது பிரச்சினை அல்ல. ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் ஒரு தேசிய கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டது உயர்சாதியினருக்கும் அதற்குச் சேவகம் செய்யும் ஊடகத்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுவரைக்கும் வடக்கே நிலவும் சாதிப் பாகுபாடுகளை எவரும் தெற்கே ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவரவில்லை. அதை இதுவரை எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தவரும் செய்யவில்லை. செய்ய துணிந்ததும் இல்லை. அந்த வகையில் இந்த விசயங்களை யாழ்ப்பாணத்துக்கு வெளியே கொண்டு வந்து தமிழ்த் தேசியத்தின் முகத்திரையை கிழித்தவர் என்ற வகையில் எனக்கு அருண் சித்தார்த் மேல் ஒரு மரியாதை உண்டு.ஆனால் இன்று அவர் தேர்ந்தெடுத்த கட்சியும் எனக்கு உடன்பாடானதும் அல்ல.


இதுவரை காலமும் தமிழ்த் தேசிய எல்லைக் கோட்டை எந்த ஒடுக்கப்பட்ட குடிமகனும் தாண்ட நினைத்தது இல்லை. 1956 களில் உங்களை தனித் தேசிய இனமாக பிரகடனப்படுத்துங்கள் . உங்களுக்கு உரிய உரிமைகளை நான் பெற்றுத் தருகிறேன் என பண்டாரநாயக்கா எம் சி சுப்பிரமணியம் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபையிடம் கூறியபோது எம் சி சுப்பிரமணியம் குழுவால் தமிழ்த் தேசியத்தை தாண்ட முடியவில்லை.எல்லோருக்கும் மனதுக்குள்ளே புலம்பினார்களே தவிர வெளியே பேசவில்லை. அதை அருண் சித்தார்த் செய்துள்ளார். இன்றும் செய்கிறார்.
அன்று கோத்தாவுடன் நின்று கிருணிகாவை எதிர்த்தவர் இன்று அதே ஐ தே வில் நிற்கிறார் என ஒரு விமர்சனம் வருகிறது.இதே ரணிலை எதிர்த்து புலிகளோடு உறவாடி மகிந்த ஜனாதிபதியானார்.அதே மகிந்ததான் புலிகளை வேரோடு அழித்தார்.இந்த மகிந்தாவை ஒழிக்க ரணில் சந்திரிகா இணைந்து மைத்திரியை நிறுத்தினார்கள்.அதே மைத்திரி பிரதமாரான ரணிலை வெளியேற்றி மகிந்தாவை பதவிக்கு கொண்டுவர முயன்றார்.பின் கோத்தா சஜித்தை எதிர்த்து நின்று ஜனாதிபதியானார். அப்போது ரணில் சஜித்துடன் நின்றார்.பாராளுமன்ற தேர்தலில் மக்களால் அறவே நிராகரிக்கப்பட்டு தோல்வி கண்ட ரணிலை கோத்தா பதவி விலகியபோது ஒப்படைத்தார்.
டக்ளஸ் ஐதேகவில் மந்திரியாக இருந்தவர். பின்னர் சந்திரிகா வந்தபோதும் இருந்தார் . மகிந்த கோத்தா ரணில் என இன்றுவரை மந்திரிதான். அவரை யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதற்கு எந்த முற்போக்காளருக்கும் துணிவும் இல்லை.
மண்ணெண்ணை மகேஸ்வரன் புலி ஆதரவாளர். புலிகள் காலத்திலேயே ஐதேக சார்பில் போட்டியிட்டு வென்றவர். அமைச்சராகவும் இருந்தார். அவரை புலிகள் கொல்லவும் இல்லை. விமர்சனம் பண்ணவும் இல்லை.அருணை மட்டும் விமர்சனம் பண்ணுகிறார்கள்.
அருண் ஒரு தேசிய கட்சி சார்ந்து இருந்தால் மட்டுமே யாழ் மேலாதிக்க சக்திகளுக்கு ஈடுகொடுக்க முடியும். ஆனால் அவர் அங்கேயும் நிம்மதியாக இருக்க மேலாதிக்க சக்திகள் விடப்போவது இல்லை.விஜயகலா தொடர்பாக அச்சம் உண்டு. சுமந்திரன் சுகாஸ் இருவருமே ரணிலோடு தொடர்புடைவர்கள். சாதி ரீதியாக ரணிலுக்கு வேதம் ஓதலாம்.
இன்றுவரை ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு விடுதலை இல்லை.1966-70 வரை போராடியும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ஒரு செய்தியை ஆதிக்க சாதிகளுக்கு அனுப்பினோம். அடித்தால் திருப்பி அடிப்போம் என்பதுதான். இலங்கையில் சிங்கள அரசு இருந்த படியால்தான் அதுவும் சாத்தியமானது.ஆனாலும் இன்றுவரையும் இலங்கை அரசில் சிங்கள தமிழ் முஸ்லிம்களைவிட யாழ் மேட்டுக்குடிகளின் செல்வாக்கே ஆதிக்கம் செலுத்திவருகிறது.
அருண் தேசிய கட்சியில் இணையாமல் எதையும் செய்ய முடியாது. யாழ் மத்திய கல்லூரியில் இராசதுரை அதிபராக இருக்க டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் செல்வாக்கே காரணம்.இல்லாவிட்டால் இராசதுரை எப்போதே காணாமல் போயிருப்பார்.யாழ் மேலாதிக்க சக்திகள் எவரையும் வளரவிடாது. அதுவே புலிகளையும் வளர்த்தது. புலிகளையும் அழிக்க காரணமாக இருந்தது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் பதவியில் இருக்க கல்வித் தகுதி மட்டும் போதுமானது அல்ல. கூடவே துணிவு சண்டித்தனம் ஆட்பலம் என்பனவும் தேவையாக இருக்கிறது. ஒரு பீயூன் பதவியைக்கூட வகிப்பதை உயர்சாதிகள் விரும்புவது இல்லை. இதுதான் யதார்த்தம்.
தென்னிலங்கை கட்சிகள் இனவாத கட்சிகளாகவே இருப்கட்டும். சாதிவெறியைவிட இனவெறி ஒன்றும் ஆபத்தான விசயம் அல்ல. சரியோ பிழையோ ஒடுக்கப்பட்ட்தமிழ் மக்கள் தேசிய கட்சிகளை ஆதரிப்பதே நல்லது.தமிழன் என்பதைவிட இலங்கையன் என்பதே மேலானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக