வெள்ளி, 22 மார்ச், 2024

விசா நீட்டிப்புக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கார்த்தி எம்.பி., மீது குற்றப்பத்திரிகை

தினமலர் : புதுடில்லி,:மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
அப்போது, பஞ்சாபின் மான்சா என்ற இடத்தில், 'தால்வாண்டி சாபோ பவர்' என்ற தனியார் நிறுவனம், மின் உற்பத்தி நிலையத்தை நிறுவி வந்தது. இந்த பணியில் ஈடுபடுவதற்காக, சீனாவைச் சேர்ந்த 263 பணியாளர்கள் பஞ்சாப் வந்தனர்.
இவர்களுக்கு அளிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்த நிலையில், அந்த விசாவையே மீண்டும் பயன்படுத்தி பணியை தொடர, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
இதற்காக, அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி வாயிலாக, விசா மறுபயன்பாட்டுக்கான அனுமதியை சீன பணியாளர்கள் பெற்றனர்.

இதற்காக, கார்த்திக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கார்த்தியிடம் பல்வேறு முறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், விசா நீட்டிப்புக்காக, பாஸ்கர் ராமன் வாயிலாக, 50 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கார்த்தியிடம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த பணத்தை, 'அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டன்சி' என்ற, தன் நிறுவனத்தில் கார்த்தி முதலீடு செய்ததாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து கார்த்தி உள்ளிட்டோரை அடுத்த மாதம் 15ல் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக