சனி, 24 பிப்ரவரி, 2024

திமுக கூட்டணியில் கொ ம தே கட்சிக்கு நாமக்கல் தொகுதி இ யூ முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி

 tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Lok sabha Election 2024: In DMK alliance Namakkal parliament Constituency for Kongunadu Makkal Desiya Katchi
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. ஆளும் திமுக தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதி என 40 இடங்களிலும் வெல்லும் நோக்கத்தில் வியூகம் வகுத்து வருகிறது.



மேலும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைவர்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசினார்.

இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பங்கேற்றது. அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினர். ஏற்கனவே முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இது 2வது கட்ட பேச்சுவார்த்தையாகும். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதாவது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இந்த தொகுதி கடந்த முறையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் ஏகேபி சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வாகை சூடினார்.

இத்தகைய சூழலில் தான் மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக கூட்டணியில் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் திமுகவின் கூட்டணி குறித்து பேசும் குழுவுடன் நாங்கள் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறோம். திமுக தலைவரும், எங்கள் கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இந்த தொகுதி பங்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். நானும், முதல்வரும் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டுள்ளோம்.

அதன்படி 2019ம் ஆண்டை போலவே ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். அதே நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி வாகை சூடும். மிக வேகமாக பிற அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. மிக விரைவில் தொகுதியில் நாங்கள் தொடங்குவோம்.

ஒரு சில கட்சிகள் கூட்டணிக்கு யார் வருவார்கள் என்று கதவையும், ஜன்னலையும், ஏன் வென்டிலேட்டரையும் திறந்து வைத்துள்ளது. ஆனால் எங்களின் கூட்டணி முடிவான கூட்டணியாகவும், தொடர்ந்து பயணிக்கும் கூட்டணியாக உள்ளது. தமிழக மக்களின் பாதுகாப்புக்காக, வளர்ச்சிக்கான கூட்டணியாக பணியாற்றி வருகிறோம். அனைத்து தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார்.


tamil.oneindia.com - Arsath Kan : சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கேட்டு வந்தது. தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் நேரு, காதர் மொகிதீனின் வேண்டுகோள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி பேசியிருக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். இன்று நேற்றல்ல காயிதேமில்லத் காலம் தொட்டு திமுகவுடன் நட்புறவை பேணி வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. மேலும் அக்கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் வந்ததிலிருந்து திமுகவுடன் சுமூகமாக உறவு பேணப்படுகிறது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 எம்.பி.சீட்களை எதிர்பார்த்த முஸ்லீம் லீக், திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் அதுபற்றியும் எடுத்துக் கூறியது. ஆனால் 1 தொகுதி தான் என்பதில் திமுக தரப்பு கறார் காட்டியதால் மேற்கொண்டு அந்த விவகாரத்தில் முஸ்லீம் லீக் தீவிரம் காட்டவில்லை.

ராமநாதபுரம் தொகுதி கிடைக்காவிட்டால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கோரிக்கையாக இருந்தது. மற்றப்படி வேலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகள் வேண்டாம் என்றே கூறிவிட்டது. ஏற்கனவே திருச்சி தொகுதிக்கு டிமாண்ட் அதிகம் என்பதால் மீண்டும் ராமநாதபுரத்தையே முஸ்லீம் லீக் கட்சிக்கு கொடுத்துவிடலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். யாருக்காக இல்லாவிட்டாலும் காதர் மொகிதீனுக்காகவும் அவரது வயதுக்காகவும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என ராமநாதபுரத்தை விட்டுக்கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ராமநாதபுரம் தொகுதியை திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி எதிர்பார்த்து காய் நகர்த்தி வந்த நிலையில், திமுக தலைமை எடுத்துள்ள இந்த முடிவு அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கக் கூடும். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீண்டும் நவாஸ் கனியே களம் காண்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், நவாஸ் கனி எம்.பி.க்கு பொதுவெளியில் கைகலப்பு உருவாகி வார்த்தைப் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களை ஜெயிக்க வைக்காவிட்டால் அமைச்சர் பதவி பறிபோய்விடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்திருப்பதால் ராஜகண்ணப்பன் மனக்கசப்புகளை மறந்து முஸ்லீம் லீக் வேட்பாளரை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக