ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

காங்கிரஸ்- ஆம் ஆத்மி: 5 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு! இந்தியா கூட்டணியில் முன்னேற்றம்!

 minnambalam.com - Aara : இந்தியா கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில்… பாசிட்டிவ் அம்சமாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டிருக்கிறது.
இன்று டெல்லி, ஹரியானா, குஜராத், சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளன.
இன்று (பிப்ரவரி 24) டெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சௌரப் பரத்வாஜ், அதிஷி, சந்தீப் பதக் மற்றும் காங்கிரஸின் முகுல் வாஸ்னிக், தீபக் பபாரியா, அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அறிவித்தபடி,  டெல்லியில் மொத்தமுள்ள 7 இடங்களில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவாகியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தெற்கு டெல்லி, புது டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதிகளிலும், காங்கிரஸ் கிழக்கு, வடகிழக்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தற்போது நாட்டின் தலைநகரில் உள்ள ஏழு இடங்களும் பாஜகவிடம் உள்ளன.



இதேபோல ஹரியானாவில் மொத்தமுள்ள 10 இடங்களில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், குருஷேத்ரா தொகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

26 தொகுதிகள் உள்ள குஜராத்தில் பாவ்நகர் மற்றும் பருச் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. மீதி 24  இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

யூனியன் பிரதேசமான சண்டிகர் எம்பி தொகுதி, கோவாவில் இருக்கும் இரு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இருப்பினும், பஞ்சாபில், இரு கட்சிகளின் மாநில தலைமைகளும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தங்களது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை முடித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட உள்ளது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சி மற்றும் இந்தியா கூட்டணியில் பங்கேற்க விரும்பும் மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.

மேற்கு வங்காளத்தில் இன்னமும் மம்தாவுடன் தங்களுக்கான கூட்டணிக் கதவு திறந்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக