ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய கிரிராஜன் எம்.பி.யின் மகன்!

 tamil.asianetnews.com - vinoth kumar :  போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.பி. கிரிராஜன் மகனை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஹூண்டாய் கார் ஒன்று நள்ளிரவு அதிவேகத்தில் சென்றது. அப்போது  திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றுள்ளது. ஆனால், இதில் யாருக்கும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் அந்த காரை விடாமல் விரட்டி சென்றனர். இதனால் இன்னும் வேகமாக சென்ற கார் செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் இருந்த இரும்புத் தடுப்பு மீது மோதி நின்றது.

பின்னர் துரத்திச் சென்றவர்கள் காரை சூழ்ந்து கொண்டு காரில், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களைப் பிடித்தனர். அத்துடன் அவர்களை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், காரை ஓட்டிவந்த இளைஞர் திமுக மாநிலங்களவை எம்.பி. கிரிராஜனின் மகன் செந்தமிழன் என்பதும் இவர் பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரியில் சட்டம் படித்து வருவதும் தெரியவந்தது. ஆளுங்கட்சி எம்.பி. சேர்ந்த மகன் என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக