ஞாயிறு, 14 ஜனவரி, 2024

மொழிக் கொள்கை பற்றி கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் காரசார வாக்குவாதம்: அண்ணாமலை கண்டனம்

tamil.oneindia.com - Nantha Kumar R :  சென்னை: மொழிக் கொள்கை பற்றி கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசாரமாக வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. புதிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி திட்டத்தை மத்திய அரசு தயாரித்தது. இதற்கும் திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மும்மொழி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தான் சென்னை அயலக தமிழர்கள் விழா நடந்தது. இந்த விழாவில் ‛ஒளிரும் எதிர்காலம்.. வாய்ப்புகளும், சவால்களும்.. என்ற தலைப்பில் 3வது அமர்வு நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார்.மேலும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கண்ணாடி அணிந்து மஞ்சள் உடை அணிந்த ஒருவர் எழுந்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், ‛‛எட்டுத்திக்கும் தமிழர்கள் செல்ல வேண்டும் என்றால் நாம் எல்லா மொழிகளையும் படிக்க வேண்டும். இந்தியை திணிக்கிறார்கள், சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள் என்பதை விட்டுவிட்டு தமிழர்களுக்கு அனைத்து மொழிகளையும் கற்று கொடுக்க வேண்டும். ஜெர்மனி, ஸ்பானிஷ் என மொழிகளையும் பயிற்றுவிக்க வேண்டும். பல மொழிகளை பயிற்றுவிக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?. மாணவர்கள் பல மொழிகள் கற்பதை ஏன் தடுக்கிறீர்கள்?'' என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பிடிஆர், ‛‛ யார் தடுக்கிறார்கள்'' என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நபர், ‛‛ நமது அரசு'' என பதிலளித்தார். இதையடுத்து பிடிஆர், ‛‛ சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மத்திய கல்வி வாரியம் அமல்படுத்துகிறது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிபிஎஸ்இ தனது கல்வியை வழங்கி வருகிறது. அதேபோல தமிழக அரசுக்கு என்று தனி வாரியம் அடிப்படையில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

இந்த வேளையில் கேள்வி கேட்ட நபர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் ‛‛இந்த மாதிரி செய்யாதீர்கள்'' என எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வேளையில் மேடையில் இருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‛‛எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்'' என கேள்வி எழுப்ப, அந்த நபர் ‛‛இது ஜனநாயகமற்றது.. நான் குளோபல் சிட்டிசன். நானும் திராவிடன் தான். எனது பெயரும் கருணாநிதி தான்'' என கூறினார். இருப்பினும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து எந்த நாட்டில் உள்ளீர்கள் என கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛முதியவர் கருணாநிதி, அமைச்சர் பிடிஆரிடம் தமிழக அரசு ஏன் மும்மொழிக்கொள்கையை செயல்படுத்துவதற்கு எதிராக உள்ளது என கேட்கிறார். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மொழி கற்கும் வாய்ப்பை இழந்ததற்கான தமிழக அரசின் தவறான கொள்கை பற்றி பேசிய அவருக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை. அதோடு அமைச்சரால் மிரட்டப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார்'' எனக்கூறி கண்டித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக