ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தெரிவு .. ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க நிதிஷ் குமார் மறுப்பு

tamil.news18.com - Mohan :   நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.
 ஏற்கனவே பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி என 4 இடங்களில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 5 ஆவது கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஜனவரி-13) நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டதாகவும், அதனை கூட்டணி கட்சிகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்தியா கூட்டணி சார்பில் முன்னெடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் இவரின் ஆலோசனையின் படியே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், தலைவராக நியமனம் செய்யப்பட்டாலும், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே கருதப்பட மாட்டார் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் முடிவெடுத்தால் மட்டுமே பொறுப்பை ஏற்பதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார். எனவே, ஒருங்கிணைப்பாளர் தொடர்பாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக