புதன், 27 டிசம்பர், 2023

விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!

summon to ED officers

minnambalam.com - Monisha : அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (டிசம்பர் 26) விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் பெறும் போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அவரை சிறையில் அடைத்தது.
பின்னர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.


குறிப்பாக அங்கித் திவாரி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.
இதனிடையே அங்கித் திவாரி கைதான அன்றைய தினம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் மதுரை மண்டல அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் உட்பட அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் இன்றைய தினம் விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப மதுரை தல்லாக்குளம் காவல்துறை முடிவு செய்துள்ளது.
மோனிஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக