புதன், 27 டிசம்பர், 2023

koose munisamy veerappan கூஸ் முனுசாமி வீரப்பன் சீசன் 1- நடுநிலையான தொடரா?

 Jaison Prathish  · :   கூஸ் முனுசாமி வீரப்பன் சீசன் 1-நடுநிலையான தொடரா?
ஒரு கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது ஆனாலும் வீரப்பன் வீரன்தான் என்று நக்கீரன் கோபால் சொல்லத் தொடங்குகிறது இந்த தொடர்.
இந்த தொடர் பற்றி பேசுவதற்கு முன்பு இந்த தொடர் வருவதற்கான காரணம் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
K.விஜய் குமார் Special Task Force(STF) தலைமை அதிகாரி Veerappan: Chasing the Brigand என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில்  2017-ல் எழுதுகிறார். அது பெரிதாக அறியப்படவில்லை.
அதனுடைய Audio Book PodCast வடிவில் 100 எபிசோடுகளாக டிசம்பர், 2022 ஆன்லைனில் வெளியாகி பரபரப்பாகிறது.
அந்த ஆடியோ புக்கின் அடுத்த கட்டமாக ஆகஸ்ட்,2023 நெட்ப்ளிக்ஸ் The Hunt For Veerappan- The Most Notorious Criminal of Indian History ரிலீசாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


ஆனால் அந்த சீரிஸ் முழுவதுமே போலிசாரின் பார்வையில் மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
விருமாண்டி படத்தில் வருவது போல் கதையை வீரப்பன் பார்வையிலிருந்து சொல்ல விரும்பிய நக்கீரன் குழுமம் போட்டியாக உருவாக்கியதுதான்  இந்த கூஸ் முனுசாமி வீரப்பன்.
எபிசோடு 1-3:
வாழ்வாதார அழிப்பே தொடக்கம்!
 Indian Forest Act-1972 பெரிய வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவித்த பின்பு காட்டில் அன்றாடம்  விறகு பொறுக்கி, வேட்டையாடி உண்டவர்கள் குற்றவாளிகள்  ஆக்கப்பட்டார்கள். இதுதான் வீரப்பனின் தொடக்கமும்.
உணவுக்காக வேட்டையாடியவன், பிறகு பணத்திற்காக வேட்டையாடத் தொடங்கி தொழிற் போட்டியில் தன்னுடைய பங்காளிகளாலேயே சுட்டுத்தள்ள முயற்சி செய்யப்பட்டு வாழ்வில் முதல் முறையாக உயிருக்கு பயந்து ஓடி ஓளிந்து வாழ்கிறான்.
தன் தாய் சாவில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த பங்காளிகளை செய்வதே முதல் கொலை. அதன் பிறகு கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்படப் போவதை அறிந்து தப்பி உயிர் பிழைக்கிறான்.‌ அடுத்த 20வருடத்திற்கு யாராலும் பிடிக்கவே முடியாத அளவுக்கு அவன் தன்னை தகவமைத்துக் கொண்டான்.
தனக்கு ஏற்படுத்திய பாதிப்பிற்க்கு பழி தீர்த்துக் கொள்ள வரிசையாக கொன்று குவித்தது DFO Srinivas, Harikrishnan SP,Shakeel Ahmed SI உட்பட 187 மனிதர்கள்...
முதல் 3 எபிசோடுகள் முழுக்க முழுக்க வீரப்பனின் வீர தீர சாகசங்களை பற்றியே பேசுகின்றன...இதில் வீரப்பன் வழியாக கதை சொல்லப்பட்டதே தவிர நடுநிலை என்ற ஒன்று மருந்துக்குமில்லை...
4வது எபிசோடு முழுக்க முழுக்க STF-ன் அட்டகாசங்கள், வீரப்பன் தேடுதல் வேட்டையில்  அப்பாவி மக்களுக்கு STF செய்த அக்கிரமங்களை கிட்டதட்ட கண்முன்னே நிறுத்துகிறார்கள்.  25 வருடங்கள் கழித்து அவர்களடைந்த துயரத்தை உணர முடிந்தது. கணத்தது மனது...
நடுநிலை என்பது பாதிக்கப்படவரின் பக்கம் நிற்பது என்ற அடிப்படையில் அந்த பழங்குடி மக்களின் துயரத்தை ஆவணப்படுத்தியது ஒரு நடுநிலைதான்.
ஆனால் 5வது எபிசோடு மறுபடியும் வீரப்பனின் சாகசங்களை glorify பண்ணுவதாகவே அமைந்திருக்கிறது.
அதில் ஒருவர் வீரப்பன் எங்க சாமி இப்ப அவர் இருந்திருந்தால் நான் அவர் கூட போய் சேர்ந்திருப்பேன்னு சொல்லும் போது இன்றும் கல்வியறிவின் அதீத தேவை புரிகிறது.
தொடரின் ஒரு காட்சியில் அப்பா இப்போதிருந்தால் நான் அவர் கூடவே இருந்திருப்பேன் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறும் போது.. ஒரு நிமிடம் 'பக்'கென்றாகிவிட்டது...
தான் படிக்கலைனாலும் தன் மகள் படிச்சு டாக்டராகி மக்களுக்கு  சேவை செய்யச் சொல்ற வீரப்பனிடமிருந்து இவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்...?
'தன்'னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள எத்தனையோ உயிர்களை கொன்று குவித்து, துப்பு கொடுத்தவர்களை சுட்டுத்தள்ளி, அப்பாவி மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்த போதும் சரணடையாமல்  'தன்'னுடைய குடும்பத்துடன் வாழ விரும்பி
பொதுமன்னிப்பு கேட்கும்போது 'வீரப்பன்' எவ்வளவு பெரிய இரக்கமற்ற 'சுயநலவாதி' என்பது தெரிகிறது.
ஒரு கட்டத்தில், 12வயது பாலகனை சுட்டுக் கொல்லும் போது வீரப்பன் முழு அரக்கனாகவே மாறிவிடுகிறான்.
அதையெல்லாம் மறந்து அவனுடைய அறிவுத் திறமையையும், நீண்ட நாட்கள் காட்டில் வாழும் திறனையும், அரசியல் பார்வையையும் புகழ்ந்து புல்லரித்து பேசுவது சரியா...?
இந்த தொடர் வெளிவந்த பிறகு எல்லா தொலைக்காட்சிகளும், ஆன்லைன் ஊடகங்களும் வீரப்பன் பற்றிய விவாதங்களை தொடர்ந்து நடத்தி அதை  பணமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
தான் ஒரு படம் எடுக்க வேண்டும் அந்தப்படம் புகழடைய வேண்டுமென்று வீரப்பன் ஒரு முறை கூறியிருந்தார். அவர் எதிர்பார்த்து போலவே இறந்து பல ஆண்டுகள் கழித்து அவரைப்பற்றிய டாக்குமென்டரி படம் பிரபலமாகியிருக்கிறது.
விசாரணை கேம்பில் பாதிக்கப்படவர்களின் வலியை உணர வைத்தற்காக நடுநிலை எடுத்திருந்தாலும் ஒரு தவறான மனிதனின் வாழ்க்கையை தூக்கிபிடித்ததில் இந்த சீசன்-1 தொடர் நடுநிலை தவறியிருக்கிறதென்று உறுதியாக  நம்புகிறேன்.
 4வது எபிசோடு ஏற்படுத்திய தாக்கத்தில் STF-ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைத்தால் இந்த தொடர் உண்மையான வெற்றியை அடையும்.
-ஜெய்சன் பிரதீஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக