புதன், 1 நவம்பர், 2023

அமைச்சர் பொன்முடி ஆளுநரின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க தீர்மானம்

zeenews.india.com - Sudharsan G  : ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி - பின்னணி என்ன?
Minister Ponmudi: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"மதுரையில் நாளை (நவ. 2) நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில் புறக்கணிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறேன்.
சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் இரண்டுமே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
சட்டத்தை மதிக்காத ஆளுநர் சங்கரய்யாவை பற்றி ஆளுநருக்கு தெரியவில்லை என்றாலும் யாரிடமாவது கேட்டிருக்க வேண்டும்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், மேலும் பலமுறை போராட்டங்கள் நடத்தி 4 ஆண்டுகள் என மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளார். சுதந்திரப் போராட்ட வீரருக்கு, 102 வயதிலும் மக்களுக்கு குரல் கொடுத்து வருபவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்காமல் ஆளுநர் நிராகரித்துள்ளார். சங்கர்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை.

சமூக நீதி பேசுபவர்களை ஆளுநருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பட்டம் கொடுக்க கூடாது என்று நினைக்கிறார், சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆளுநர் விளக்க முடியுமா?. பட்டம் கொடுக்க மறுக்கிறார் என்றால் ஆளுநரை என்னவென்று சொல்வது.

மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்
நடிப்பு சுதேசியாக ஆளுநர் இருப்பது வருந்தத்தக்கது. ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு ஆதரவாகதான் ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்கிறார். ஆளுநர் ஒரு nominal executive, மாநில அரசு real executive, தமிழக அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதை செய்ய வேண்டியவர்தான் ஆளுநர். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என யாராக இருந்தாலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆளுநருக்கு  அக்கறை இருந்தால் பட்டம் கொடுக்க வேண்டியது தானே. ஆளுநரை போன்று சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு எதிரிகள் கிடையாது. ஆளுநர் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாகதான் இது போன்று செய்கிறார்.

ஆளுநர் பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார், தமிழக அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதை செய்ய வேண்டியது தான் ஆளுநர் வேலை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மாநில ஆளுநர் செயல்படுகிறார் என்றால் கண்டிக்கதக்கது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை போல் மோசமான ஆளுநர் இதுவரை இருந்ததில்லை. இவரைப் போல் தவறு செய்தவர்கள், பொய் பேசுபவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழக ஆட்சியின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகள்
சங்கர்யயாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆளுநர் மறுத்து உள்ளதால், நாங்கள் மதுரை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை, ஆளுநர் என்ன எண்ணத்தில் செயல்படுகிறார் என்று தெரியவில்லை, வேந்தர் என்று பதவியை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆளுநர் நினைக்கிறார். பல்வேறு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் பதவி காலியாக உள்ளது, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும், திராவிட மாடல் என்றால் ஆளுநருக்கு கசப்பாக உள்ளது, தமிழ் நாட்டை பொருத்தவரை திராவிட மாடலை யாராலும் அசைக்க முடியாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக