திங்கள், 13 நவம்பர், 2023
யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!
veerakesari : யாழ். மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்களால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்கள்
எறும்பு போல் உழைத்து தேனீ போன்று சேமிக்கப் பழக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண மாவட்ட மக்கள். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்தி தமது எதிர்கால நலன்கருதி சிறுகச்சிறுகச் சேமிப்பவர்களும் இந்த மக்களே.
பொருளாதார நெருக்கடியால் அனைத்து பொருட்கள், சேவைகளுக்கும் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக நாட்டு மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்தவே பெரும்பாடு படுகின்றனர். அதிலும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது கொள்ளைச் சம்பவங்கள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது . இதனால் பாதிக்கப்படுவது வசதி படைத்தவர்கள் மாத்திரமல்ல ஏழை மக்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அவரவர் தராதரத்திற்கு ஏற்ப பாதிப்படைகின்றனர்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பாரிய கொள்ளைகள் தொடக்கம் கால்நடைத் திருட்டு வரையான பல சவால்களுக்கு மக்கள் அன்றாடம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. கொழும்பில் போன்று வழிபறிகொள்ளைகள் ,பஸ் மற்றும் ரயில் கொள்ளைகள் கோவில் உற்சவம் களின்போது திட்டமிட்ட கொள்ளைகள், வீடுடைப்பு என அன்றாடம் குறைவின்றி கொள்ளைகள் தொடர்கின்றன .
திருட்டுக்கள் அதிகரிக்க பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும்-இன்றைய இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்ற போதைவஸ்துப் பாவனையே திருட்டுக்கள் இடம்பெற பெரும் பங்கு வகிக்கின்றன.
ஒரு சோடி காது தோட்டினை அபகரிப்பதற்காக 85 வயது முதியவரை கொலை செய்த சம்பவம் கூட யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனை விட அண்மையில் நடந்தேறிய நெடுந்தீவுக் கொலைச் சம்பவங்கள் என ஏராளமான கொலைச் சம்பவங்கள் வெறுமனே பணத்திற்கும்-நகைகளுக்கும் ஆசைப்பட்டு நடந்தேறியுள்ளன.
மனிதநேயம் அற்ற சுயநல பூமியில் வாழ மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற நிச்சயமற்ற நிலைமைக்கு மத்தியில் எம் யாழ்ப்பாண மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதனை விட அண்மைக் காலங்களில் யாழ் மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பகற் கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸாரே திணறிய நிலைமை காணப்பட்டது.
இவை குறிப்பாக அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுக்களாகவே காணப்பட்டன.இறுதியில் பொலிஸார், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி திருட்டுக்களை குறைத்தனரே தவிர திருடர்களை பிடிக்க முடியாத கையாளாகாதவர்களாகவும்-மக்களை குறை சொல்லி தம்மை பாதுகாக்க முயன்றவர்களாகவுமே காணப்படுகின்றனர் .
இதனைவிட மோட்டார்சைக்கிள்களைத் திருடி, திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று வீதியால் செல்லும் பெண்களின் நகைகளை அபகரிக்கும் கும்பல் ஒன்று அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.இவை நகைகளை அபகரிக்கும் இடத்திலேயே திருட்டு மோட்டார்சைக்கிளை கைவிட்டு தாம் தப்பித்துச் செல்லுகின்றனர் .
குறிப்பாக ஏழை விவசாய மக்களுடைய வயிற்றில் அடிக்கும் திருட்டுச் சம்பவங்கள் கூட யாழ் மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளை திருடுவது,இரவு வேளைகளில் பட்டிகளில் இருந்து கால்நடைகளை திருடிச் செல்வது போன்ற சம்பவங்களுடன்,மேலும் கால்நடைகளை இறைச்சியாக்கி எடுத்துச் செல்லும் நிலைமை கூட காணப்படுகிறது.
கன்றுத் தாச்சி மாட்டைக் கொன்று கன்றை வீசி விட்டு தாய் மாட்டின் இறைச்சியை எடுத்துச் சென்ற மிருகத்தனமான செயற்பாடுகள் கூட எமது மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இவை அனைத்துமே பாமர மக்களுடைய வாழ்வாதாரத்தை அடியோடு சாய்க்கும் செயற்பாடுகளாகவே இருந்து வருகின்றன. அண்மையில் சாவகச்சேரிப் பொலிஸார் கனரக வாகனத்தில் புத்தளம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகளை உயிரோடு மீட்டிருந்தனர். அவை அனைத்துமே யாழ் மாவட்டத்தின் விவசாய குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வளர்த்த கால்நடைகள்.
இவ்வாறான கட்டுப்படுத்த முடியாத கால்நடைத் திருட்டுக்களால் மக்கள் கால்நடைகளை வளர்ப்பதில் ஈடுபாடு இல்லாதவர்களாக மாறியுள்ளனர்.இதனால் பால் விலை அதிகரிப்பு,வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு யாழ் மாவட்ட மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
பெரும்பாலும் யுத்தத்தால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட மக்களே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இருந்து வருகின்றனர்.யுத்தம் நிறைவுக்கு வந்து 14வருடங்கள் கடக்கின்ற போதிலும் அவர்கள் அந்த யுத்த வடுவில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை.குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்னோக்கியா நிலையிலேயே உள்ளனர்.
கணவனை இழந்தவர்கள்,பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள் என ஏராளமான பெண்கள் தமது அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற ஏக்கத்தில் உள்ளனர்.இவ்வாறானவர்கள் தொண்டு அமைப்புக்களின் உதவியோடு சிறு வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொண்டாலும் அதனை வைத்து முன்னேற சமூகத்தில் உள்ள சிலர் இடம் கொடுப்பதில்லை.
கொள்ளைகள் பல வடிவில் இடம்பெறுகின்றன.அதில் நேரடியாக மக்களின் உடமைகளை அபகரிப்பது ஒரு விதம்.இயற்கையின் வளங்களை சுரண்டி விற்பதும் இன்னொரு விதம் .அந்தவகையில் காடுகளை அழிப்பதும்,மணல் அகழ்வதும் யாழ் குடாநாட்டின் இருப்பை கேள்விக்குறியாகிறது.காடழிப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் இடம்பெறுகின்ற வகைதொகையின்றிய மணல் அகழ்வினால் கடல் நீர் குடிமனைகளுக்குள் உட்புகும் அபாய நிலை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில் காணப்படுகிறது.
இவற்றுக்கு எதிராக மக்கள் போராடினாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த திணைக்களங்களாலும்-பொலிஸாராலும் முடிவதில்லை.சில இடங்களில் இவ்வாறான வள அழிப்புக்களை தடுக்க பொலிஸார் அஞ்சும் நிலையும் -அதனைவிட கடத்தல்களுக்கு துணை போகின்ற நிலைமையும் கூட இருப்பதாக மக்கள் கடந்த கால பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ் குடாநாட்டின் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் பெருமளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.இதனால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுவதுடன்-பயிர்ச்செய்கை நிலங்கள் பலவும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றது.
இவற்றுக்கு மேலாக அரச அதிகாரிகள் போன்று பாசாங்கு செய்து கிராமங்களில் மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏராளம் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுள்ளன.தற்போதும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக மோசடிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.
குறிப்பாக பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களாக தம்மை அடையாளப்படுத்தும் மோசடிக்காரர்கள் நலத்திட்டங்களுக்குள் தங்களுடைய பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.அதனை நடைமுறைப்படுத்த முற்பணம் செலுத்த வேண்டும் என ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான மோசடி சம்பவங்கள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் தனித்திருக்கும் வீடுகளிலேயே இடம்பெறுகின்றன.
நுண்கடன், மீற்றர் வட்டி
தற்போது வடக்கு மாகாணத்தில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் மீற்றர் வட்டி முறைமைகளால் பலர் தற்கொலை செய்யும் மற்றும் உயிர் மாய்க்க முற்படுகின்ற சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இவ்வாறான நிதி நிறுவனங்கள் பலவும் உரிய அங்கீகாரம் இன்றி இலாப நோக்கோடும்-மக்களுடைய பணத்தை சூறையாடும் நோக்கோடும் மாத்திரமே செயற்பட்டு வருகின்றன.இதை அறியாத ஏழை மக்கள் அவசர தேவைகளுக்காக பணத்தை கடனாக பெற்று விட்டு பின்னர் அதனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடனை அடைக்க முடியாத நிலைமையால் பல பெண் தலைமைக் குடும்பங்களில் உள்ள பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகின்ற நிலைமை கூட காணப்படுகிறது. இதனை விட இணைய வழி மோசடி ,வெளிநாட்டு மோகத்தால் போலி முகவர்களிடம் ஏமாறுவது என பல வழிகளாலும் வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ். மாவட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக போதைப்பொருள் கலாசாரம் யாழ் குடாநாட்டை ஆட்டிப் படைத்து வருகிறது.கலாசாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் இரவு “போதை விருந்து” இடம்பெற்றிருப்பதாகவும் அதில் பெருமளவு இளைஞர்-யுவதிகள் கலந்து கலந்து கொண்டதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து அறிய முடிகிறது.
போதைப்பொருள் கலாசாரத்திற்குள் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் இளைய சமுதாயம் தான் இன்றைய கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுக்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாக அமைந்து விடுகின்றது .போதைக்கும்-ஆடம்பர வாழ்க்கைக்கும் அடிமையானவர்கள் அதனை தக்க வைப்பதற்காக இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
நிச்சயமாக எமது சமுதாயத்தால் இன்றைய இளம் சந்ததியை மீட்டெடுக்க முடியும்.அதற்கு எமது சமுதாயம், உரிய தரப்பினர் மற்றும் பொலிஸாரோடு இணைந்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை மேற்கொண்டு அவர்களை மீட்டெடுக்க வேண்டும் . யாழ் குடாநாட்டில் தற்போது கல்வியை தொடராமல் பாடசாலையை விட்டு விலகிய சிறுவர்கள் பலர் உள்ளனர்.
இவ்வாறானவர்களே காலப்போக்கில் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்களாக மாற்றப்படுகின்றனர். அவ்வாறான சிறுவர்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டு பாடசாலை கல்வியை தொடர பிரதேச செயலகம், கல்வித் திணைக்களம் ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனூடாக திருட்டு,கொலை,கொள்ளை உள்ளிட்ட வன்முறைகளை தவிர்த்து ஆரோக்கியமான சிறந்த வருங்கால குடாநாட்டை உருவாக்க முடியும். அதுவே அனைவரும் எதிர்பார்ப்பும் கூட.
த.சுபேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக