திங்கள், 13 நவம்பர், 2023

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்!

tamil.oneindia.com - Vigneshkumar : லண்டன்: பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது.
Rishi Sunak sacked Suella Braverman from UK home secretary post after pro-Palestine march
அப்படி தான் பிரிட்டனிலும், கடந்த சில நாட்களாக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையானது.
பதவி நீக்கம்: பலரும் அவருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முதலில் அமைச்சரவையில் இருந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நீக்க மறுத்தார். இருப்பினும், கண்டனங்கள் அதிகரித்த நிலையில், வேறு வழியில்லாமல் இப்போது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அழுத்தம் அதிகரித்த நிலையில், பிரிட்டன் அமைச்சரவையில் ரிஷி சுனக் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சுயல்லா பிரேவர்மேன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர், பாலஸ்தீன போராட்டம் குறித்து அவரது கருத்துகள் சர்ச்சையான நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுயல்லா பிரேவர்மேன் கடந்த 2022 அக். மாதம் முதல் இங்கிலாந்து உள்துறை அமைச்சராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன சொன்னார்: இஸ்ரேல் போரை தொடர்ந்து பிரிட்டனில் நடக்கும் போராட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் சாடினார். மேலும், பாலஸ்தீனிய சார்பு கும்பல்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அவர் சாடினார். இது தொடர்பான ஒரு கட்டுரையையும் அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தான், சுயல்லா காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பேரணிகளை "வெறுக்கத்தக்கக் கருத்துகளைப் பரப்பும் அணிவகுப்புகள்" என்று குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும், பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற ரேஞ்சில் பேசியிருந்தார். அவரது இந்த பொறுப்பற்ற பேச்சுகள் அங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சை கருத்துகள்: இது மட்டுமின்றி பிரிட்டன் நாட்டில் இப்போது விலைவாசி உயர்வால் அனைவரும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் சிலர் வீடற்றவர்களாக இருப்பது அவர்களின் விருப்பத் தேர்வு என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஏற்கனவே, விலைவாசி உயர்வு தொடங்கிப் பல காரணங்களால் ரிஷி சுனக் அரசு மீது பொதுமக்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், சுயல்லாவின் இந்த பேச்சுகள் மேலும் நிலைமையை மோசமாக்குவது போலவே இருந்தது.

இந்தச் சூழலில் தான் அவர் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தனது பதவிநீக்கம் குறித்து சுயல்லா பிரேவர்மேன வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்துறை செயலாளராக பணியாற்றியது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். நான் இன்னும் நிறைய உண்மைகளைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அவற்றை உரிய நேரத்தில் சொல்வேன்" என்று கூறி மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக