திங்கள், 13 நவம்பர், 2023

‘பெரியார்” என்று மட்டுமே அழைக்கவேண்டும்! 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 : தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! நிறைவேற்றிய தீர்மானம்!

 Annamalai Arulmozhi : தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு!  நிறைவேற்றிய தீர்மானம்!
‘பெரியார்” என்று மட்டுமே அழைக்கவேண்டும். ‘
1938ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 13 அன்று  சென்னை ஒற்றை வாடை அரங்கில் நடைபெற்றது தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு . மாநாடா அது ? சென்னையில் மையம் கொண்ட இந்தி எதிர்ப்புப் புயல்! .
சுயமரியாதை இயக்கத்தின் மூத்த பெண் தலைவர்கள் முன்னெடுத்த  இன, மொழிப் போருக்கான அறைகூவல் ,உரிமைக் குரல்களின் எழுச்சியாய் ஒலித்தது .
மேடையிலும் அரங்கத்திலும் நிறைந்திருந்தனர்.
ஆளுமை மிக்க திராவிட இயக்கப் பெண் போராளிகள். அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள் மூன்றுபேர் . டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம், மலர்முகத்தம்மையார்.
அந்த மாநாட்டின் அலுவலகம் அமைந்த இடம் 330, தங்கசாலை, சென்னை. இரவும் பகலும் தோழர்கள் கூடி விவாதம் செய்து மாநாட்டுப் பணிகளை மேற்கொண்ட அந்த முகவரி டாக்டர் தருமாம்பாள் அவர்களின் இல்லமாகும்.


அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பெண்கள் கூடி
நிறைவேற்றிய தீர்மானங்களில் முதன்மையாக இடம்பெற்றவை ,
இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழிக்கான முன்னுரிமை மற்றும் பெண்களுக்கு அனைத்துத் துறையிலும் சம உரிமை என்பவையாகும்.
அந்த மாநாடு மற்றவர்களுக்கு நம்ப முடியாத அதிசயமாகத் தெரிந்தது. ஏனென்றால் அக்காலத்தில் மற்ற இயக்கங்களின் பெண்கள் மாநாடு கூட்டினால் வரதட்சணை ஒழிப்புத் தீர்மானம்தான் போடுவார்கள்;

வேதப்பெருமை, மதப் பெருமை, சாஸ்திரப் பெருமை பேசுவார்கள்.
தேச விடுதலைபற்றியும் கூடப் பேசுவார்கள். ஆனால் மறந்தும் கூட பெண்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு வேண்டும் என்றோ பெண்கல்வி, குழந்தைத் திருமணத்தடை, விதவைத் திருமண உரிமை, சொத்திலே பங்கு என்பவை பற்றியோ பேசமாட்டார்கள்.
அவற்றையெல்லாம் பேசியவை திராவிட இயக்க மாநாடுகள் மட்டுமே.
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட   மிக முதன்மையான தீர்மானம்  ஒன்றுண்டு. அதுதான் “பெரியார் “
என்ற பட்டமே நம் திராவிட இயக்கத் தலைவரின் பெயரான வரலாறு.
“ இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ. வெ. இராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவர் இல்லாமையாலும் - அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம், “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறது. “
என்பதே அந்தத் தீர்மானமாகும். இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பே இராமசாமிப் பெரியார் என்றும் பெரியார் ராமசாமி என்றும்தான் அவரது பெயரை பல்வேறு தலைவர்கள் குறிப்பிட்டார்கள். இனி பெரியார் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்பதே இத்தீர்மானத்தின் சிறப்பு.
அந்தத் தீர்மானம் பெற்ற வெற்றியும் தந்தை பெரியாரின் புகழும் இன்றுவரை நீடித்து நிலைத்து நிற்கின்றன என்பதே அப்பட்டத்தின் சிறப்புக்கு சான்று. அதை வழங்கிய பெண்தலைவர்களின் அரசியல் நுண்ணறிவிற்கான சான்றுமாகும்.
அப்பட்டத்தை வழங்கியவர்கள்  யார் யார் என்ற பட்டியல் இன்னும்   மலைப்பைத் தருகிறது.
மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் (மாநாட்டுத்தலைமை.)
மாநாட்டில் தமிழர்களின் உரிமைக்கொடியை ஏற்றி உரையாற்றியவர் மீனாம்பாள் சிவராஜ் அம்மையார் .
பண்டிதர் நாராயணி அம்மையார்
பட்டம்மாள் பாலசுந்தரம்(பாவலர்)
தாமரைக்கண்ணி அம்மையார்
மற்றும் சிறப்பு வாய்ந்த ஆளுமைகள் பலர் பங்கேற்ற இந்த மாநாட்டை முன்னின்று நடத்தியதில் பெரும்பங்கு டாக்டர் தருமாம்பாள் அவர்களையே சேரும். சென்னை தங்கசாலையில் இருந்த அவரது இல்லமே இந்த மாநாட்டு அலுவலகமாக செயல்பட்டது.
இதன்தொடர்ச்சியாக 14.11.1938 இல் வீராங்கனைகள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் வியப்பூட்டும் பல தகவல்களைக் கொண்டிருந்தது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக