திங்கள், 8 மே, 2023

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு.. சசிகலாவையும் சந்திக்க முடிவு

 tamil.oneindia.com - Mani Singh S  பெரிய ட்விஸ்ட்.. இணைந்து செயல்படுவதாக ஓபிஎஸ்-டிடிவி தினகரன் அறிவிப்பு.. சசிகலாவையும் சந்திக்க முடிவு
சென்னை: அதிமுகவை காப்பாற்ற இணைந்து செயல்பட முடிவு செய்து இருப்பதாக ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் கூட்டாக தெரிவித்தனர்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரனும் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது:- சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்து பணபலம் ஆணவத்தோடு செயல்படுவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து தீயசக்தி திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இந்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் நானும் ஓபிஸ்சும் இணைந்து இருக்கிறோம்.

எங்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பம் இதுதான். செய்தியாளர்கள் கேட்கும் போது கூட உரிய நேரத்தில் சந்திப்போம் என்று சொல்லி வந்தேன். அதற்கான நேரம் இப்போது வந்து விட்டது. எங்களுக்குள் மனதளவில் பகை உணர்வு கிடையாது. ஒரு சில காரணங்களால் பிரிந்து இருந்தோம். மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்.

எங்களுடைய ஒரே குறிக்கோள் உண்மையான அம்மாவின் தொண்டர்களிடம் இந்த இயக்கத்தை ஒப்படைப்பதுதான். ஓ பன்னீர் செல்வத்தை நம்பி இருட்டில் கூட கையை பிடித்து செல்லலாம். எடப்பாடி பழனிசாமியை நம்பி போக முடியுமா? எடப்பாடி பழனிசாமி துரோகி எனில் திமுக எங்களுக்கு பொது எதிரி" என்று தெரிவித்தார். டிடிவி தினகரனின் ஓ பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்த உடன் சந்திக்க இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இவர்கள் மூன்று பேரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ பன்னீர் செல்வம் - டிடிவி தினகரனின் இந்த முடிவால் வரும் நாடாளுமன்றத்தில் தேர்தல் கூட்டணிகள் மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக