திங்கள், 8 மே, 2023

பி.டி.ஆர் இலாகா பறிப்பு: நிதியமைச்சர் ஆகிறாரா தங்கம் தென்னரசு?

மின்னம்பலம்  - christopher : தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில் இதுவரை ஒரு இடைக்கால பட்ஜெட் மற்றும் இரண்டு முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு பொருளாதார நிதி முன்னேற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வந்த பிடிஆர் தேசிய அளவிலும் கவனிக்கப்படும் ஆளுமையாக உருவெடுத்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதியும், முதல்வர் மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டதாக பிடிஆர் பேசியது போல் ஒரு ஆடியோ க்ளிப் வெளியாகி திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனையடுத்து அவர் பேசிய மற்றொரு ஆடியோவையும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டார். 

எனினும், இரண்டு ஆடியோவும் போலியானது என்றும், ஆடியோவில் உள்ளது போன்று தாம் யாரிடமும் பேசவில்லை என்றும் அறிக்கையாகவும், வீடியோவாகவும் இருமுறை பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக கடந்த 1ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

ptr finance dept moving to thangam thennarasu

பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ பதிவில் பேசிய  முதல்வர் ஸ்டாலின், “அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மேலும் இதுபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை”  என்று பதிலளித்தார்.

முதல்வர் இப்படி பேசியிருந்தாலும், ஆடியோவில் இருந்தது பி.டி.ஆர். குரல் தான் என்பதை போலீசாரிடம் அறிக்கையாகவே வாங்கி வைத்திருந்தார் முதல்வர்.

இந்தசூழலில், திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க  பொதுக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும்  1,222 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பேச்சாளர்கள் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம்பெறுமா இல்லையா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

ஆனால் நேற்று (மே 7) மாலையில் சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டம் தொடர்பான போஸ்டர்களில் அமைச்சர் பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சனின் பெயர் சிறப்பு பேச்சாளராக இடம்பெற்றது.

ptr finance dept moving to thangam thennarasu

அதோடு நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை.

சாதனை விளக்கப் பொதுக்கூட்டப் பட்டியலில் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டது மற்றும் அவர் கூட்டத்தில் பங்கேற்காதது அரசியல் களத்தில் பெரும் சந்தேகத்தையும், கேள்வியையும் தற்போது எழுப்பியுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சு எழுந்து வருகிறது. இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் வெளியாகும் டிஜிட்டல் திண்ணையில்  ’அமைச்சரவை மாற்றம்… திமுகவுக்குள் பஞ்சாயத்துகள்!’ என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் ஆடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள பி.டி.ஆர் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும், அவரது நிதியமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று பேசப்படுகிறது.

ஏற்கெனவே ’நிதி அமைச்சர் பதவியை நீங்கள் நிர்வகிக்கிறீர்களா’ என்று, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மூத்த அமைச்சர் ஒருவர் முதல்வர் சார்பாக பேசியிருக்கிறார்.

அவரோ, ’நிதியமைச்சர் பதவியை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு எனக்கு உடல்நிலை சரியாக இல்லை’ என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார். இச்செய்தியை நாம் மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

ptr finance dept moving to thangam thennarasu

ஆனால், அமைச்சர் உதயநிதி, முதல்வர் சார்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசுவை வரவழைத்து, ”நீங்கள் நிதியமைச்சர் பதவியை நிர்வகிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

முதலில் மறுப்பு தெரிவித்த தங்கம் தென்னரசு, தற்போது ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகிறது.

இதையடுத்து பி.டி.ஆர்க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வகித்து வரும் தொழிற்துறையை தருவதா அல்லது அமைச்சர் மனோ தங்கராஜ் வகித்து வரும் தகவல் தொழில்நுட்பத்துறையை தருவதா என்று ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக