புதன், 29 மார்ச், 2023

கச்சத்தீவை ஒரு சுதந்திர வாணிப தீவாக மேம்படுத்தலாமே?

 ராதா மனோகர் : இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கடலில் ஏராளமான மணல் திட்டுக்கள் உண்டு
அவற்றில் இருக்கும் ஒரு பெரிய மணல் திட்டுதான் கச்சத்தீவு!
பேச்சு வழக்கில் இந்த திடல்களை தீடல் என   சிலர் குறிப்பிடுவார்கள்.
இந்த திடல் மீது ஏறி நின்று கடலை பார்ப்பது வார்த்தையால் வர்ணித்து விடமுடியாத ஒரு அனுபவம்!
ஏராளமான சிறு திடல்களும் உள்ளன .. அவற்றில் சில கடலின் மேல் மட்டத்தில் தெரியாது.
சில அங்குலம் அளவு கடலுக்கு அடியில் இருக்கும்
அதிலொன்றின் மீது ஏறிநின்று பார்த்தால் ஒரு கடலின் நடுவில் நாம் தண்ணீரில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படும்..
கேரளாவில் வியாபாரத்தை கச்சோடம் என்பார்கள்
அதாவது அன்று கேரளாவில் முதன்மை கச்சோடமாக / வாணிபமாக இருந்தது வட இலங்கைக்கான
கடல் போக்குவரத்து வாணிபமே!


அந்த கடல்போக்குவரது வணிகர்கள் கச்சத்தீவை ஒரு இடைத்தங்கல் நிலமாக பயன்படுத்தி இருக்கக்கூடும்
இந்த கச்சோடம் செய்ப்பவர்கள் சாவகச்சேரியில் உள்ள கச்சாய் துறைமுகத்திற்கு வந்து போயுள்ளார்கள்
மேற்கில் இருந்து கிழக்கிற்கு வரும் காற்றை நம்பி வரும் பாய்மர படகுகள்  இலங்கை வடபகுதியை நோக்கி  வருவார்கள்
இந்த காற்றுக்கு  கச்சான் காற்று என்று இலங்கையில் பெயர்
இதன் காரணமாகவே இந்த தீவுக்கு கச்சத்தீவு என்று பெயர் வந்திருக்க கூடும்
இது ஒரு ஊகப்பார்வை மட்டுமே   வரலாற்று ஆய்வுக்கு உட்பட வேண்டியதாகும்.
இன்றும் கூட கச்சத்தீவு என்பது இப்பகுதி மக்களும் சந்தித்து பண்டங்களையும் அன்பாயும் பரிமாறும் இடமாக உள்ளது.
அண்மையில் தோழர் சூர்யா சேவியர் கூட கச்சத்தீவில் வாங்கிய ராணி சந்தன சோப்பை காட்சி படுத்தி ஒரு பதிவிட்டிருந்தார் .
நான் கூட முன்பொருமுறை இந்த வாணிப அனுபவத்தை பெற்றிருக்கிறேன் !
இந்த நோக்கத்திற்கு மிகவும் வசதியான கச்சத்தீவை இருபகுதியினரும் வந்து போகும் ஒரு சுதந்திர வாணிப தீவாக ஏன் மேம்படுத்த முடியாது?
இரு பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு ஒரு சுற்றுலா தீவாக மேம்படுத்தலாம்.
அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு இதில் வாய்ப்புள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக