புதன், 29 மார்ச், 2023

ஒடுக்கப்படும் தமிழரே .. தீண்டா சாதிகளென்று புறக்கணிக்கப்படுவோரே .. 1930 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி

 ராதா மனோகர் : இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாக கருதுகிறேன்.
கடந்த கால கசப்புக்களை  கிளறுவதாக யாரும் தவறாக கருதி விடவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வரலாறு மக்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்ற நல்நோக்கத்தில் மட்டுமே இதை பதிவிட்டுள்ளேன்
1930 ஆகஸ்ட்  யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி
ஒடுக்கப்படும் தமிழரே   .. தீண்டா சாதிகளென்று புறக்கணிக்கப்படுவோரே
கீழ் சாதிகளென்றும் தாழ்த்தப்பட்டவரென்றும் ஒதுக்கப்பட்டவர்களே
அன்பான சகோதர சகோதரிகளே   விழியுங்கள்!  எழுந்திருங்கள்!!
உங்கள் காரியத்தை நீங்களே கைகூடப்பண்ணுங்கள்!
ஆவணி  மாதம் 1 ஆம் திகதி தொடங்கி புரட்டாதி மாதம்  11 ஆம் திகதி மட்டும் உங்கள்  பெயர்களை பதிவு செய்து புதிய சட்டசபைக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்யும்  உரிமையை பாவியுங்கள்
முந்திய காலத்தில் படித்தவர்களும் பணக்காரருக்கும் மாத்திரம் கவுன்சிலுக்கு (சட்டசபைக்கு) தெரியும் உரித்துடையவர்களாக இருந்தார்கள்.
எங்கள்  இங்கிலீஷ் அரசப்பெருமான் இலங்கை அரசு முறை திருத்தஞ் செய்வதை  யோசித்து  முடிவு செய்யும் படி அனுப்பிய டொனமூர் பெருமானும் அவர் கூட்டாளிகளுக்கு  கப்பல் ஏறுமுன்னமே பெரிய சாதியார் என்போர் எமக்கு செய்யும் நீதியீனத்தையும்  அநியாயத்தையும் சாதிக்கொடுமையையும் அவதந்திரங்களையும் நாங்கள் தெளிவாய்  அவர்களுக்கு எழுத்தில்  அனுப்பி அடிமைத்தனத்தில் இருந்தும்  சாதிக்கொடுமையில் இருந்தும் விடிவிக்குமாறும் கேட்டிருந்தோம்.

அந்த மகான்கள் யாழ்ப்பாணம் வந்த போது எங்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நாலு பேர் அவர்களை கண்டு எங்கள் குறைகளை முறைப்பட்டோம்.
அடிமை குடிமை சிறை கட்டிகளென்று நாம் கட்டி வைக்கப்பட்டிருப்பதை வெளியிட்டோம்.
அதைக்கேட்டு  அவர்கள் மனமிரங்கி 21 வயதுக்கு மேற்பட்ட எந்த ஆணும் பெண்ணும் எந்த  சாதியானும் எந்த  சமயத்தானும் எந்த பிச்சைக்காரனும் எந்த எளியவனும் தனக்கு  நன்மையையும் உதவியும் செய்கின்ற ஆளைத்தெரிந்து கவுன்சிலுக்கு  விடும்  சிலாக்கியத்தை தந்து விட்டார்கள்
பிரியமான சகோதரிகளே சகோதரர்களே  நீங்கள் உடனே குறிக்கப்பட்ட இடத்தில் கையொப்பமிட்டு அதை எசென்ட்டு துரைக்கு அனுப்பவேண்டும்.



நீங்கள் மேல்சாதிக்காரருக்கும் தலைமைக்காரருக்கும் ஊராதிகாரிகளுக்கும் பயந்து கையெழுத்து போடாமல்  விடவேண்டாம்.
இது இங்கிலீஸ் அரசாட்சி காலம்  . உங்கள் கையெழுத்து எசென்ட்டு துரைக்கு போகும்.
21  வயதுக்கு மேற்பட்ட எந்த ஆணும் பெண்ணும் புரட்டாசி மாதம் 11 ஆம்  திகதிக்கு  முன் தங்கள் பெயர்களை ஏசேன்ட்டருக்கு அனுப்பும்படி புத்தி சொல்கிறோம்..
பெயர் எழுதுகிர கடதாசிகளை தபால் கந்தோர்களிலும் மணியக்காரன்மாரிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்,
விபரம் தெரியாதவர்கள் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களாய் அங்கிருக்கும் அங்கத்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நாங்கள் சங்கமாக வேண்டிய உதவியை செய்யவே இருக்கிறோம்.
அருமையானவர்களே பெரியவர்களே என்று சாலம் பண்ணிவரும் ஒருவருக்கும் நீங்கள் உங்கள் பெயரை தருவதாய் மட்டும் வாக்குப்பண்ணி போடவேண்டாம்.
எங்களை  ஒடுக்கி எங்கள் பிள்ளைகளை படிக்கவிடாமல் தடுத்து படிக்கிற பிள்ளைகளுக்கு  வாங்கு முதலிய கொடுக்க மறுத்து வஞ்சகம் பண்ணி எசென்ட்டு துரை , கவர்னர்  ,சீர்மையில் இருக்கும் மந்திரி ராசா முதலிய எல்லோருக்கும் எழுதி எங்கள்  உரிமையை களவாடி எங்களை கீழ்சாதிகளென்று வாய்கூசாமல் சொல்லி ஆடுமாடுகளை போல  நடத்தி தீண்டப்படாதவர்கள் ஊத்தையர்கள் கெட்டநாற்றம் உடையவர்கள் எளியவர்கள்  சூழ்ந்து துப்பி திரியும் எகிரிகள்,
முறைப்பாடுகாரரான எங்களுக்கு தீமை செய்ய வழிதேடுகிறார்கள்.
முகமன் பேசியும் தந்திரமாய்  நடித்தும் எங்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.
எங்களை ஒருவரிலிருவர் பெரியவர்களென்றும்  சிறியவர்களென்றும் சைவரென்றும் கிறிஸ்தவரென்றும் சொல்லி பிரித்து விடப்பார்க்கிறார்கள்.


நான் அதைச்செய்வேன் இதை செய்வேன் என்று சொல்லி இனிப்பு காட்டி   தருணத்திற்கு தகுந்த வேஷம் கட்டி எங்களை மடையராக்குகிறார்கள்.
 இந்த காலமெல்லாம் எங்களை காலில் போட்டு மிதித்து,
தாங்கள்  படித்து உழைத்து மறுபடியும் பெரிய புள்ளிகளாகி மறுபடியும் எம்மை  நாயினும்   கெட்டவர்கள் என்றும் ஈனச்சாதி என்றும் சொல்லி தூற்றுகிறார்கள்.
கவனம் ! முதலாவது உங்கள் கையெழுத்தை குறித்த கடதாசியில் போட்டு நேரே அல்லது எங்கள் மூலம் எசன்ட்டாரிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.
  ஒரு கடதாசியல்லாமல் உங்களை அணாப்பும் (ஏமாற்றும்) மற்றவர்களுக்கு இசைந்து பல கடதாசிகளில் கையொப்பம் இட்டுவிட வேண்டாம்.
அப்படி போட்டால் குற்றம் இருக்கவும் மறியலுக்கு போகவும் நேரிடும்.
இரண்டாவது  எங்கள் சாதிகளுக்கு உதவி செய்து எங்கள் பிள்ளைகளை படிக்கவும் .அவர்கள்  மனுஷராய் வரவும் வழி திறக்கின்றவர்களுக்கே அல்லாமல் மற்ற ஓநாய்களுக்கு  உங்கள் பெயர்களை உரிமைகளை கொடுக்க வேண்டாம். சுபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக