வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள்!

tamilwin -  Benat :   நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பெரும்பாலான மக்கள் இங்கு வாழ விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இளைஞர்கள் குழு ஒன்று அண்மையில்  கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இது ஒரு பெரிய நெருக்கடி. நாம் இதிலிருந்து மீள வேண்டும். அப்போதுதான் நாம் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியும். ஆனால், நாம் இந்த நிலையில் இப்படியே இருக்கப் போகிறோமா? அல்லது இதிலிருந்து மீளப் போகிறோமா என்பதே முதல் கேள்வியாகும்.

புதிய பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்ப முடியாது. 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இதனை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள்! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி ரணில் | Sri Lankans Trying To Leave The Country

இது பெரியவர்களுக்கான பட்ஜட் அல்ல. பொதுவாக 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று சொல்ல வேண்டும். இன்று உங்களுக்கு 40 வயது என்றால், உங்களுக்கு 65 வயது ஆகும்போது இந்த இலக்கை அடைய முடியும். இன்று உங்களுக்கு 20 வயது என்றால் 45 வயதாகும் போது இந்த இலக்கை அடைய முடியும்.

அப்போது அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நான் பிறந்தபோது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்த நாடாக இலங்கை இருந்தது. இன்றைய நிலையில் ஆப்கானிஸ்தான் மட்டுமே நமக்கு கீழே உள்ளது.

இந்தப் பிரச்சினையால் எமது இளைஞர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டில் சிறிது காலம் நிலவிய இனக் கலவரத்தால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இன்று அப்படிப்பட்ட கலவரங்கள் இல்லாவிட்டாலும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

பெரும்பாலான மக்கள் இங்கு வாழ விரும்பவில்லை. தற்போதைய அரசியல் அமைப்பில் அவர்களுக்கு திருப்தியில்லை. இந்த முறைமையில் மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள்.

மேலும் நாம் பொருத்தமான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன்படி, அடுத்த 25 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உள்ளேன்.

ஜப்பான், சீனா, சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் முன்னேறிச் செல்லக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் இருந்து இந்தப் பணி ஆரம்பமாகிறது. ஓகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துக்கு ஓரளவு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவந்தது.

2023 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதன்மூலம் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்  என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக