வெள்ளி, 16 டிசம்பர், 2022

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் ஜப்பானுக்கு வழக்கப்படுகிறது?


BBC Tamil :  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மீண்டும் பரபரப்பை தோற்றுவித்திருக்கிறது.
இலங்கை வர்த்தக சபையின் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானுக்கு வழங்கியுள்ளதாகவும், அதனை ஜப்பான் நிராகரித்தால் வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் கொழும்பு இலகு ரயில் திட்டம் என்பனவற்றை மீண்டும் ஜப்பானுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் அரசல் புரவலாக தகவல்கள் வெளியாகின.


எனினும், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்ததுடன், ஜப்பானும் தங்களுக்கு அவ்வாறான திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருந்தது. இந்தநிலையில் திடீரென, ஜப்பானின் பக்கம் பந்தை வீசியிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கிழக்கு முனையத்தை ஜப்பானுக்கு வழங்குவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்றும், ஆனால் நாட்டின் அந்நியச் செலவாணி கையிருப்பை அதிகரிப்பதற்கு, அரசாங்க சொத்துக்களை விற்பதை விட வேறு வழியில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானுக்கு வழங்குவதற்கு அதிகாரபூர்வமற்ற வகையில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது என்பதையே இது உறுதிப்படுத்தியிருக்கிறது.

கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியா- ஜப்பான் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, முத்தரப்பு உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது.

அதுபோன்றே, கொழும்பில் போக்குவரத்தை இலகுபடுத்த, 1.3 பில்லியன் டொலர் செலவில், மோனோ ரயில் திட்டத்தை, முன்னெடுக்கும் உடன்பாடும் ஜப்பானுடன் செய்து கொள்ளப்பட்டது.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்கள் அல்லது உடன்பாடுகளையும், கிழித்தெறிந்தது.

இதனால் ஆரம்ப திட்ட மதிப்பீடுகளுக்காக செலவிடப்பட்ட 5.978 பில்லியன் ரூபாய் இழப்பு நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அதேவேளை, கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ வழங்க முடியாது என்று கோட்டா அரசாங்கம் முடிவெடுத்தது.

அதற்குப் பின்னால், சீனா இருந்தது என்ற வலுவான குற்றச்சாட்டுகள் இருந்தன. அப்போது அரசாங்கத்துக்குள் அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர், கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

அவர்களின் ஊடாகவே, துறைமுக தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதையடுத்து, கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது, அதனை துறைமுக அதிகார சபையே அபிவிருத்தி செய்யும் என்று அறிவித்திருந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

அதனை அவர் அறிவித்த போது, நாட்டின் பொருளாதார நிலை ஒன்றும், மேன்மையான நிலையில் இருக்கவில்லை.

பொருளாதார பேரழிவு ஒன்று நெருங்கி வருவது குறித்து அரசாங்கத்துக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆனாலும், சீனாவைத் திருப்திப்படுத்துவதற்காகவே, கோட்டா அரசாங்கம், அந்த முடிவை எடுத்தது.

அதுபோலவே, ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படவிருந்த மோனோ ரயில் திட்டத்தையும் கோட்டா அரசாங்கம் ரத்துச் செய்தது.

இந்த இரண்டு முடிவுகளும், இலங்கைக்கும் இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை சீரழித்து விட்டது.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் ஒரு கட்டத்தில், மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கினார்.

700 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் அதானி நிறுவனத்துடன் அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டது. அந்த திட்டம் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோலவே ஜப்பானின் மோனோ ரயில் திட்டத்தை இரத்துச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர், அதே திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

இந்த இரண்டு திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அனுமதியளித்திருந்தால், இந்தளவுக்கும் அந்த திட்டங்கள் பெருமளவில் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியிருக்கும்.

அதேவேளை, கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை துறைமுக அதிகார சபை அபிவிருத்தி மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்து வருகின்ற போதும், பொருளாதார நெருக்கடியால் அந்த திட்டம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

இதன் முதல் கட்டம், அடுத்த ஆண்டு ஜூலையிலும், அடுத்த கட்டம், 2024 ஜனவரியிலும், முழுப்பணிகளும், 2025 ஜனவரியில் நிறைவடைய வேண்டும்.

550 மில்லியன் டொலர்கள் செலவிலான இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு துறைமுக அதிகார சபையிடம் போதிய நிதி வசதி இல்லை.

கட்டுமானப் பணிகளை விட, இந்த முனையத்தில் பொருத்தப்பட வேண்டிய பாரம் தூக்கிகள் மற்றும், கொள்கலன்களைக் கையாளுகின்ற கருவிகளையும் இறக்குமதி செய்வதற்கு அதிகளவு நிதி தேவை.

முதற்கட்டமாக விரிவாக்கப்படும் கொள்கலன் மேடையில் பொருத்தப்படுவதற்கான பாரம் தூக்கிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான கொள்வனவுக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ள போதும், அதற்குச் செலுத்துவதற்கு போதிய வெளிநாட்டு நாணய கையிருப்பு அரசாங்கத்திடம் இல்லை.

இந்த கொள்கலன் முனையத்தை அமைக்கும் பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்தால், வெளிநாட்டு நாணய வருமானத்தை தேடிக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

ஆனால், அந்த திட்டங்களை பூர்த்தி செய்யக் கூடிய இயலுமை தற்போது அரசாங்கத்திடம் இல்லை என்று தெரிகிறது. அதனால் தான், ஜப்பானுக்கு அதனை வழங்குவது குறித்து, ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருக்கிறார்.

கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கும், மோனோ ரயில் திட்டத்தை ஜப்பானும் செயற்படுத்த அனுமதித்திருந்தால் பெருமளவு பிரச்சினைகள், நெருக்கடிகளை தவிர்த்திருக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன்னரும் அவர் கூறியிருந்தார்.

இப்போது அவர் கிழக்கு முனையத்தை ஜப்பானுக்கு வழங்க முன்வந்திருக்கின்ற போதும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு ஜப்பான் தயாராக இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

இலங்கையின் மீதான நம்பிக்கையை ஜப்பான் பெருமளவில் இழந்து விட்டது.

சீனாவை நம்பி, ஜப்பானின் நம்பகத்தன்மையையும், ஆதரவையும் இலங்கை இழந்து போனது பெரியதொரு இழப்பாகும்.

அதனை ஜனாதிபதி பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அவர் முயற்சிகளை முன்னெடுத்த போதும், இன்று வரை அது சரிப்படவில்லை.

அதனால் தான், ஜனாதிபதி ஜப்பானுக்கு வழங்குவோம் அவர்கள் அதனை ஏற்காது போனால் வேறு நாடுகளுக்கு வழங்குவது பற்றி ஆலோசிப்போம் என்று கூறியிருக்கிறார்.

ஜப்பானைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு இலங்கையில் பாரிய திட்டங்களில் முதலீடு செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.

ஜப்பான் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை நிராகரித்தால், அடுத்து என்ன நடக்கப் போகிறது? இங்கு அடுத்த பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்க பிள்ளையார் சுழி போடுவதாகத் தெரிகிறது.

தற்போது கொழும்பு துறைமுகத்தில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடமளிக்கப்பட்டிருக்கிறது. கட்டி முடித்து, முகாமைத்துவம் செய்து, 35 வருடங்களில் மீள ஒப்படைக்கும் வகையில், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத் திட்டம் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

அதனை இன்னும் 25 ஆண்டுகளில் இலங்கையிடம் சீனா ஒப்படைக்க வேண்டும். மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி குழுமம் கட்டத் தொடங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் கிழக்கு முனையத்தை விட்டு ஜப்பான் விலகிக் கொண்டால், சீனாவும், இந்தியாவும் கிழக்கு கொள்கலன் முனையத்துக்காக கடுமையாக போட்டி போடும்.

சீனாவிடம் உள்ள தெற்கு முனையத்துடன் போட்டி போடுவதற்காகவே முன்னர் ஜப்பானுடன் இணைந்து இந்தியா கிழக்கு முனையத்தை கைப்பற்ற போட்டியிட்டது.

அதனைத் தடுப்பதற்காக சீனா தனது புலனாய்வுப் பலத்தையும் நிதி வளத்தையும் பயன்படுத்தியது.

கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் வழங்கினாலோ சீனாவிடம் வழங்கினாலோ கொழும்பு துறைமுகத்தில் தற்போது காணப்படும் சமநிலையை குழப்பி விடும்.

இதனால் கிழக்கு முனைய விவகாரம் மீண்டும் பிராந்திய, சக்திகளுக்கிடையிலான மோதலை உருவாக்கி விடலாம்.

ஏற்கனவே பல விடயங்களில் இலங்கையின் ஆட்சியாளர்கள், இவ்வாறான ஆதிக்கப் போட்டிக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அதற்கான சூழலைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

(ஹரிகரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக