வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஸ்டேன் சாமிக்கு எதிராக ஹேக்கர்கள் சதி; அதிர்ச்சியில் சமூக செயற்பாட்டாளர்கள்!

நக்கீரன்  - - தெ.சு.கவுதமன் :  பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடிய சமூக செயற்பாட்டாளரான ஸ்டேன் சாமியின் கைதுக்குப் பின்னணியில் மிகப்பெரிய சதி நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவருக்கு மாவோயிஸ்ட்டுகளின் தொடர்பு இருப்பதுபோல் சோடிப்பதற்காக அவரது கணினியில் போலியான கோப்புகளை ஹேக்கர்கள் உதவியுடன் புகுத்தியிருப்பதை அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும், மக்களோடு மக்களாக இணைந்து களப் போராட்டமாகவும், நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டமாகவும் செயல்பட்டு வந்த போராளிதான் பாதிரியார் ஸ்டேன் சாமி. திருச்சி அருகே பூதலூர் பகுதியில் பிறந்து பணி நிமித்தமாக 1970ஆம் ஆண்டு ஜார்கண்ட் சென்றபோது அங்குள்ள பழங்குடியின மக்கள் கார்ப்பரேட்டுகளாலும், அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கடந்த 2018 ஜனவரி 1-ம் தேதி, பீமா கொரேகானில் ஏற்பட்ட வன்முறை வழக்கில் ஸ்டேன் சாமியை 2020 அக்டோபர் மாதத்தில் அவரது 83வது வயதில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் என்.ஐ.ஏ. அமைப்பு கைது செய்து சிறையிலடைத்தது. 'பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதைத் தவிர என்ன தவறு செய்தேன்?' என்று கேள்வி எழுப்பினார் ஸ்டேன் சாமி. கரோனா உச்சத்திலிருந்த காலகட்டத்தில் சிறையிலிருந்த அவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதோடு, முதுமையில் வரும் உடல் நடுக்க நோயாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவையோ, நீரையோ கையால் பிடித்து அருந்தவும் சிரமப்பட்டார். எனவே தண்ணீர் குடிக்க வசதியாக ஸ்ட்ரா கொடுக்கும்படி கேட்டதற்கு அதையும் மறுத்தார்கள். அவரது உடல்நிலை மேலும் மோசமாக, உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஜாமீன் கோரப்பட்டது. அதற்கான விசாரணை நடக்கும் முன்பாகவே 2021 ஜூலை மாதத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்டேன் சாமியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தபோது அவரது லேப்டாப்பில், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடைய 44 கோப்புகள் இருந்ததாகக் குற்றம்சாட்டினார்கள். ஸ்டேன் சாமியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தில், அவரது லேப்டாப்பை சோதனை செய்து பார்க்க அனுமதி கேட்க, நீதிமன்றம் இசைந்தது. அதன்படி, அமெரிக்காவிலுள்ள அர்சேனல் தடயவியல் நிறுவனத்திற்கு அவரது லேப்டாப்பை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அவர்கள் அளித்த முடிவுகள்தான் தற்போது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஸ்டேன் சாமியின் லேப்டாப்பில் கண்டெடுக்கப்பட்ட அந்த 44 ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆவணங்களை, ஸ்டேன் சாமிக்கே தெரியாமல் ஹேக்கர்கள் மூலமாக அவரது லேப்டாப்பில் புகுத்தியுள்ளனர் என்றும், அந்த ஆவணங்களை ஸ்டேன் சாமி ஒருமுறை கூட திறந்து பார்க்கவில்லை என்றும் நிரூபித்துள்ளனர்.

இந்த ஆவணங்களை, கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாகக் கடந்த 2014 அக்டோபர் 19 முதல் ஜூன் 12, 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஹேக்கர்கள் திணித்திருக்கிறார்கள். இந்த ஹேக்கர்கள் இந்திய அரசோடு தொடர்புடையவர்கள் என்பதற்கான ஆதாரம் எதையும் சொல்லமுடியாவிட்டாலும், இந்திய அரசுக்கு எதிராகக் களமாடிய சமூக செயற்பாட்டாளர்கள் பலரின் கணினிகளிலும் இதேபோல ஹேக்கர்கள் மூலமாகச் சதி நடந்திருப்பதைப் பார்க்கையில் இதன் பின்னணியில் அதிகார வர்க்கம் இருப்பதாக உறுதியாகச் சந்தேகிக்கலாம். இதுகுறித்து என்.ஐ.ஏ. அமைப்பைச் சேர்ந்த உயரதிகாரிகளிடம் ஆங்கில ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

ஸ்டேன் சாமியின் லேப்டாப்பில் செய்த சதியைப் போலவே, இவரோடு கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரின் கணினிகளிலும் ஹேக்கர்கள் மூலமாகப் போலி கோப்புகளை இணைத்திருக்கிறார்கள். இப்படியான சதிச் செயல்கள் மூலமாக சமூக செயற்பாட்டாளர்களை சமூக விரோதிகளாக மாற்றியிருப்பது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக