செவ்வாய், 20 டிசம்பர், 2022

சென்னையில் பகலில் குப்பை லாரிகளை இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மாலை மலர்  : சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகரில் துர்நாற்றம் வீசும் குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் குப்பை லாரிகளின் பின்னால் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை.
இந்த லாரிகளில் இருந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் விபத்து ஏற்படுகிறது.
குப்பைகள் மீது வலைகளைப் போர்த்தாமல் செல்வதால் லாரியில் இருந்து குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அலுவலக நேரத்தில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.
வெளிநாடுகளில் இரவு நேரங்களில் மட்டுமே குப்பை லாரிகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, சென்னையிலும் இரவில் மட்டும் குப்பை லாரிகளை இயக்கவும், பகலில் குப்பை லாரிகளை இயக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, குப்பை லாரிகள் இயக்குவதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக