செவ்வாய், 20 டிசம்பர், 2022

2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு வந்ததுதான் சாதனை'' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நக்கீரன் :    சென்னை நுங்கம்பாக்கத்தில் 'அன்பின் கிறிஸ்துமஸ்' எனும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''ஆதிதிராவிட கிறித்தவர்கள் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது.
ஆனால் 2006-11 ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு என்ன சலுகைகள் வழங்கப்பட்டதோ அதனை ஆதிதிராவிட கிறித்துவர்களுக்கும் வழங்கிய ஆட்சி இது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான கோரிக்கை எடுத்து வைத்துள்ளார்கள்.
அதை ஒன்றிய அரசுதான் இன்றைக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு நிலையில் இருப்பதையும் இனிகோ இருதயராஜ் எடுத்துச் சொன்னார்.
ஒன்றிய அரசுக்கு நாம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறோம். காத்திருப்போம்.
 இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கமாட்டீர்களா?
ஒன்றிய அரசு அதனை முறையாகச் செய்வதற்கு முன்வரவில்லை என்று சொன்னால் நான் உறுதியோடு சொல்லுகிறேன்.

மாநில அரசு எந்த வகையில் அதற்கான உதவி செய்ய முடியுமோ அந்த உதவியை நிச்சயமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிறுபான்மையினர் நலனில் எப்போதும் அக்கறை செலுத்துவது திமுக அரசுதான். எனவே மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புவது ஜெருசலேம் நகருக்குப் புனித பயணம் செல்வதற்கு அருள் சகோதரிகள் கன்னியாஸ்திரீகளுக்கு வழங்கப்பட்டு இருக்கக்கூடிய மானியம் எப்படி உயர்த்தி வழங்கப்பட்டதோ, அதேபோல் பொருளாதார சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் எப்படி வழங்கப்பட்டு வருகிறதோ இந்த சாதனைகள் நிச்சயமாகத் தொடரும் என மீண்டும் மீண்டும் உங்களிடம் நினைவு படுத்துகிறேன்.

இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான மகளிர்க்கு இலவச பேருந்து பயணத்தை ஏற்பாடு செய்ததுதான்; இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது கரோனா காலத்தில் கல்வியை நிறுத்திய 2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு வந்ததுதான்; இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஏழை எளிய மக்களை நோக்கி மருத்துவம் செல்வதுதான்'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக