செவ்வாய், 27 டிசம்பர், 2022

வாழ்வாதாரத்திற்காக போராடும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் – பட்டதாரிகள்! பாராமுகம் காட்டிவரும் அரசு!

vinavu.com  :  ஒப்பந்த அடிப்படையில் பணி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26.12.2022 அன்று காலை 10 மணி முதல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் பார்வையற்ற பட்டதாரி இளைஞர் சிங்காரவேலன் கூறுகையில், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வகையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
எந்த அரசும் தற்போது வரை எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற துளியும் முயற்சி எடுக்கவில்லை. இந்த சமூகநீதி பேசும் ஆட்சியில், ஏதாவது நடக்குமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதுதான்.
ஏன் என்றால், அமைச்சரை பார்த்து எங்கள் பிரச்சினையை முன்வைக்கலாம் என வந்தோம்.


அவரை பார்க்க முடியாது என்றனர். துறைச் செயலாளரை பார்க்க முயன்றால் ஒரு சில நபர்கள் மட்டும் வாருங்கள் என்று கூறி தவிர்த்துவிடுகிறார்கள்.
ஆனால், எங்கள் கோரிக்கையோ நாங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால், கடைசி வரை அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து முழக்கமிட்டு சோர்ந்து நாங்களாகவே திரும்பிபோக வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நினைப்பது. அதுதான் நடக்கவும் செய்கிறது.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகளாகிய நாங்கள், கல்லூரி படிப்பை முடிப்பதற்கும் பட்டம் பெற்று ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கும் பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக பலகட்ட இன்னல்களை சந்தித்து வந்துள்ளோம். குறிப்பாக பார்வையற்றவர்களை பெற்றோர்கள் பராமரிப்பதே கடினமான நினைக்கும்  சூழ்நிலையில் எங்களை படிக்க வைத்து பட்டம் பெற துணை நின்ற பெற்றோர்கள் வயதுமூப்பின் காரணமாக இன்று கடுமையான பொருளாதார  இன்னல்களை சந்தித்து வருகின்றன. பல ஆயிரம் செலவு செய்து படித்து இன்று வரை ஒரு உத்தரவாதமான வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அனைத்து தடைகளையும் கடந்து இன்று பி.ஏ, பி.எட், எம்.எட், பி.எச்.டி, ஆகிய படிப்புகளை படித்தும், நெட்(NET), செட்(SET), டெட் (TET) ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதற்கு உண்டான தகுதியை வைத்திருந்தாலும், எங்களை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

அதன்படி தேர்ச்சி பெற்று ஆசிரியராக இருக்கும் நாங்கள். தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்துவந்தோம். அதன்பின் கொரோனா பெருந்தொற்றை காரணம்காட்டி  அவர்களும் எங்களை நீக்கிவீட்டனர். இந்த பொருளாதார நெருக்கடி சூழலில்தான் அரசு அறிவித்துள்ள கௌரவிரிவுரையாளர்கள் காலிபணியிடத்தில் பார்வையற்ற பட்டாதாரியாகிய எங்களுக்கு முன்னுரிமை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம்” என்றனர்.

அரசு ஏற்கெனவே நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் நூறு பேருக்கு ஒருவர் என காலிபணியிடத்தை ஒதுக்குவது என்பது எந்த வகையில் சரியானது தமிழ் பாடத்தை மெஜராக முடித்த பார்வையற்ற பட்டதாரிகளே இருநூறு பேர் இருக்கிறோம் என்று நிலைமையை எடுத்து முன்வைக்கிறார் பட்டதாரி ஒருவர்.

இப்படி அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் எங்களை பணி அமர்த்தாமல் புறக்கணிப்பதால் உயர்படிப்பு படித்த பல பார்வையற்ற பட்டதாரிகள் பேருந்துகள் மற்றும் இரயில்களில் கடலை மிடாய், பர்பி, மிட்டாய் விற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தற்போதைய சூழ்நிலையில் நாங்களும் அந்நிலைக்கே தள்ளப்படுவோம் என கவலையோடு அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறோம் என்றார்.

“பி.ஏ முடிச்சோம் சார், ஏம்.ஏ முடிச்சோம் சார், பி.ஏட் முடிச்சோம் சார், எம்.ஏட் முடிச்சோம் சார்”; “வேலை மட்டும் இல்ல சார்” என்று முழக்கமிட்டது சுற்றி நின்றவர்களை திகைக்க செய்தது. நன்றாக கண் தெரியும் நாமே ஒரு பட்டபடிப்பு மட்டுமே முடித்துள்ளோம். ஆனால் பார்வையற்ற இவர்களோ தகுதித் தேர்வு வரை முடித்துள்ளார்களே என்று.

அப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பார்வையற்ற பட்டதாரிகள் இருவர் ஏன் நம்மைவிட போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று ஒருவர் கேட்க மற்றொரு கண்பார்வையற்ற நாம் குண்டு போட்டு விடுவோம் என்றுதான் என்று கூறினார். மேலும் ஏன் அமைச்சர், துறைச் செயலாளர் கீழ் இறங்கி நம்மிடம் பேச்சுவார்தை நடத்த வரவில்லை என்று ஒருவர் கேட்க, வந்து நின்று பேசினால் கால்கள் வழிக்கும் அல்லவா என்று அதிகாரிகளை கடிந்துகொண்டனர். இறுதி வரை யாரையும் சந்திக்க முடியாத நிலையில் மூன்றுபேர் மட்டும் அதிகாரியை சந்தித்து கோரிக்கையை வைத்தனர். வழக்கம்போல், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பார்வையற்றவர்களை ஊமையாக்கிவிட்டனர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்.

அனைத்து அரசுத்துறை பணிகளும் தனியார்மயமாக்கப்படுவது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவர்கள் நடைமுறைப்படுத்தி கொண்டுவரும் கான்ட்ரக்ட் வகையிலான ஒப்பந்த வேலையையாவது கொடுங்கள் என்று நம்மை இந்த நிலையை மறைமுகமாக ஏற்றுக்கொள்ள வைக்கின்றனர். அதுதான் இனி இயல்புநிலையாக மாறும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.

வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக