tamil.oneindia.com - Vigneshkumar ; லண்டன்: பிரிட்டன் நாட்டில் மக்கள்தொகை கணக்கீட்டில் முதல் முறையாக 50% குறைவானார்கள் மட்டுமே கிறிஸ்துவர்களாக தங்கள் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இது அந்நாட்டின் கலவையான கலாச்சாரத்தைக் காட்டுவதாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
இதைப் பலரும் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் மக்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த சமீபத்திய டேட்டா வெளியாகியுள்ளது. இதில் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாகக் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு தரவுகளின்படி பிரிட்டன் மக்கள்தொகையில் சுமார் 59.3% பேர் தங்களைக் கிறிஸ்துவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருந்தனர். இது இப்போது 46.2%ஆகக் குறைந்துள்ளது. சுமார் 5.6 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிரிட்டனில் இப்போது 2.7 கோடி பேர் மட்டுமே கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிறிஸ்துவர்களின் மக்கள்தொகை சுமார் 13% குறைந்துள்ளது. பிரிட்டன் வரலாற்றில் கிறிஸ்துவர்களின் மக்கள்தொகை 50% கீழ் குறைவது இதுவே முதல்முறை.
நாத்திகர்கள்
இதன் மூலம் பிரிட்டனின் சுமார் 50% மேலான மக்கள் கிறிஸ்துவ மதத்தைச் சேராதவர்களாகவே உள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தைத் தரும். இதில் இடம் இடத்தில் எந்தவொரு மதமும் இல்லை. மாறாக எந்த மத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களின் எண்ணிக்கை அங்கு 37.2% உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 25% பேர் மட்டுமே தங்களை நாத்திகர்களாக அடையாளப்படுத்திக் கொண்ட நிலையில், இப்போது அது 12% அதிகரித்துள்ளது. அங்கு வாழும் மக்களில் சுமார் 2.2 கோடி பேர் தங்களை நாத்திகர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
விளக்கம்
பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தான் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் மதம் குறித்த கேள்விக்கு சுமார் 2.2 கோடி பேர் மதம் இல்லை என்பதை டிக் செய்துள்ளனர். அதற்காக இவர்கள் அனைவருமே நாத்திகர்கள் என்று சொல்லிவிட முடியாது என்றும் அவர்களில் பலர் agnostic, அதாவது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் கவலை இல்லை எனச் சொல்லும் அஞ்ஞானவாதிகளே இருப்பார்கள் என்று லண்டன் கிங் காலேஜ் பேராசிரியர் லிண்டா உட்ஹெட் தெரிவித்துள்ளார்.
அடுத்த இடம்
அடுத்து மூன்றாவது இடத்தில் இஸ்லாம் மதம் உள்ளது. அங்குக் கடந்த 2011ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 4.8%ஆக இருந்தது. இது இப்போது 6.5%ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் சுமார் 38 லட்சம் பேர் தங்களை இஸ்லாமியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் பிரிட்டனில் அதிகம் பின்பற்றப்படும் மதங்களில் இஸ்லாம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாத்திகர்கள் மதம் எனக் கருத முடியாது என்பதால் இஸ்லாம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்துக்கள்
கடந்த 2011இல் பிரிட்டனில் 1.5% இந்துக்கள் இருந்த நிலையில், இப்போது அது 1.7ஆக அதிகரித்துள்ளது. அதாவது பிரிட்டனில் 10 லட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள் இந்துக்களாக உள்ளனர். அங்கு மூன்றாவது அதிகம் பின்பற்றப்படும் மதமாக இந்து மதம் உள்ளது. அடுத்து அங்கு சுமார் 5 லட்சம் பேர் சீக்கிய மதத்தையும், 2.72 லட்சம் பேர் பவுத்த மதத்தையும் 2.71 லட்சம் பேர் யூதர்களாகவும் உள்ளனர். மற்ற மதங்களைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 3.48 லட்சமாக உள்ளது.
பெரும்பான்மை இல்லை
இதன் மூலம் முதல்முறையாக அங்குக் கிறிஸ்துவர்களின் மக்கள்தொகை 50% கீழ் குறைந்துள்ளது. இத்தனை காலம் அங்குக் கிறிஸ்துவர்களின் மக்கள்தொகையே பெரும்பான்மையாக இருந்தது. இப்போது அது அங்கு மாறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் அங்குப் பிரிட்டனின் முதல் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் என்ற இந்து டாப் பொறுப்பிற்கு வந்தார். மக்கள்தொகை கலவையாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இன ரீதியான தகவல்
இன ரீதியாகப் பார்க்கும்போது, அங்கு சுமார் 82% மக்கள் வெள்ளையர்களாக உள்ளனர். இது அதிகம் போல தெரிந்தாலும் கூட இதுவும் 2011ஐ ஒப்பிடும் போது சற்று குறைவுதான். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 86% பேர் வெள்ளையர்களாக இருந்த நிலையில், இப்போது அது 81%ஆக குறைந்துள்ளது. அடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு 42 லட்சமாக இருந்த ஆசிய நாடுகளைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை இப்போது 9%ஆக, அதாவது 55 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல 19 லட்சமாக இருந்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தோரின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Now more than 50% of UK people are non christians: UK population by religion latest data in tamil.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக