சனி, 17 டிசம்பர், 2022

பிரதமர் மோடி ஹிட்லரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ்.,காரர்: பாக்., அமைச்சர் பிலாவல் பூட்டோ பேச்சு

தினமலர் : புதுடில்லி: பிரதமர் மோடியை கசாப்புக்கடைக்காரர் எனவும், அவரும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் பாகிஸ்தான் அமைச்சர் வெளியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
பயங்கரவாத பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.
நேற்றைய (டிச.,15) கூட்டத்தில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ பேசுகையில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய ஜெய்சங்கர், ‛நமக்குள்ள ஆபத்துகள், அச்சுறுத்தல்களை இயல்பானதாக்கும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற நாடுகளால் எதிர்க்கப்படும் விஷயத்தை நியாயப்படுத்துவதுடன், அதை எழுப்பவும் அனுமதிக்கக் கூடாது. இது எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கும் பொருந்தும்.

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய அல் குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், இந்திய பார்லி., மீது தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதம் குறித்து இந்த கவுன்சிலில் பிரசங்கம் செய்வதற்கு என்ன தகுதி உள்ளது?' என பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.

இந்நிலையில், ஜெய்சங்கரின் கருத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, பாக்., அமைச்சர் பிலாவல் புட்டோ, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், ‛ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார்.

ஆனால், குஜராத் கசாப்புக்கடைகாரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார். அவர் (பிரதமர் மோடி) அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அவரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் (ஜெய்சங்கரும்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்,' எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னதாக பா.ஜ.,வினர் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக