சனி, 5 நவம்பர், 2022

சாத்தான்குளம்: “தந்தை, மகன் இருவரையும் ரத்தம் வடிய கூட்டிட்டு வந்தாங்க!”- சாட்சியம் சொன்ன ராஜாசிங்

ஜெயராஜ், பென்னிக்ஸ்
ராஜாசிங்
, ராஜாசிங்

விகடன்  :  இந்த வழக்கில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது.
அதில் பல அதிர்ச்சியூட்டும் சாட்சியங்களை இணைத்திருந்தவர்கள், புதிய சாட்சிகளாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வின்னிலா, கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங் என்ற கைதியையும் சேர்த்திருந்தனர்.
ஏற்கெனவே அரசு மருத்துவர் வின்னிலா சாட்சியம் அளித்த நிலையில், ராஜாசிங் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
வெளியில் வந்தவர் செய்தியாளர்களிடம், “நான் கோவில்பட்டி சிறைச்சாலையிலிருந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் நடக்க முடியாத நிலையில் கொண்டு வந்தாங்க.
உடம்பெல்லாம் காயமா இருந்துச்சு. ரத்தம் வடிய வடிய வந்தாங்க. நான் அவங்ககிட்டே விசாரிச்சப்போ, சாத்தான்குளம் போலீஸ் அடிச்சதா சொன்னாங்க.


என்னையும் ஒரு வழக்குகல சாத்தான்குளம் போலீஸ் கடுமையா தாக்கி ரத்தம் சொட்டச் சொட்ட சிறைக்குக் கொண்டு வந்தாங்க.

இதை நான் அப்ப டாக்டர்கிட்ட சொல்லியிருந்தேன். இந்த நிலையிலதான் ஜெயராஜ், பென்னிக்ஸையும் விடிய விடிய சித்ரவதை பண்ணி, தாக்குதல் நடத்தி சிறைக்கு கொண்டு வந்ததா அவங்க சொன்னாங்க.
அந்த அடிப்படையில்தான் இன்னைக்கு சாட்சி சொல்ல வந்தேன். செய்யாத குற்றத்துக்காகச் சிலர் தூண்டுதலின் பேரில் என்னை எஸ்.ஐ பாலகிருஷ்ணனும்,

ரகு கணேஷும் மூன்று நாள்கள் ஸ்டேஷன்லவெச்சு கடுமையா அடிச்சாங்க. அங்கருந்து வேறொரு ஸ்டேஷனுக்கு கூட்டிப்போயும் சித்ரவதை செஞ்சாங்க” என்றார். இவர் இன்று நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் கொலை மற்றும் சட்டவிரோதமாகச் சிறையில் வைத்தல், சாட்சியத்தை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவரும் நிலையில்…

வழக்கில் கூடுதல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய அனுமதிக்க வேண்டுமென்று சி.பி.ஐ தாக்கல் செய்த மனுமீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவில், “இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட ஒன்பது பேர்மீது கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் கூடுதல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யக் குற்றப்பத்திரிகை, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

விடுபட்ட கூடுதல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை வழக்கு நடைபெறும் கீழமை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும். அதனால், கீழமை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிறையிலிருந்தபடி வாதாடிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும் கூடுதல் பிரிவுகளை வழக்கில் பதிவுசெய்யக் கூடாது என்று வாதிட்டனர்.

இந்த வழக்கை வருகிற 11-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக