சனி, 5 நவம்பர், 2022

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: இதுவரை 277 பேர் பலி; 14,000 பேர் கைது.. Protests in Iran gain momentum

Hindu Tamil  :  தெஹ்ரான்: ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் கூறும்போது, “கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறையை கைவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக