புதன், 1 ஜூன், 2022

உக்கிரேனில் பிரித்தானியர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்?

 Thesam Jeyabalan  :  பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரைன் இன்னுமொரு வன்னி!!!
பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.


உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றவர்களில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பிரித்தானிய அரசு அனுமதியோடு சென்றதாகச் சொல்லப்படவில்லை. உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவச் செயற்பாடுகளால் விரக்தியடைந்து நாடு திரும்பிய இருவரை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இன்று மே 31 நேர்கண்டு ஒளிபரப்பி இருந்தது. இந்நேர்காணல்களைத் தொடர்த்து பிரித்தானிய தொலைக்காட்சி  தனது செய்திகளில் உக்ரெய்ன் வெற்றிபெற்று வருவதாக கூறுவதை நேற்றைய தினம் மே 30 முதல் அடக்கி வாசிக்கின்றது.
உக்ரெய்ன் யுத்தத்தில் உக்ரெய்ன் இராணுவத்துடன் சேர்ந்து யுத்தம் புரியச் சென்ற 18 வயதேயான இளைஞர், தங்களுக்கு உறுதியளித்தது போல் எவ்வித ஆயதப் பயிற்சியும் வழங்கப்பட வில்லை என்றும் உக்ரெய்ன் இராணுவத்திடம் எவ்வித இராணுவ ஒழுங்கமைப்புகளும் இருக்கவில்லை என்றும் அடிப்படை பாதுகாப்பு அங்கிகளே தங்களுக்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். தன்னையும் தன்னைப் போன்ற வேறுநாடுகளில் இருந்தும் இராணுவத்தில் சேர வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது மறுநாள் ரொக்கற் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார். இத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் தெரிவித்து இருந்தபோதும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அதில் நூறுபேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்விளைஞர் தெரிவித்தார்.
இதே போல் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்குள்ள நிலைமைகளை கடுமையாக விமர்சித்ததுடன் அங்கு எவ்வித இராணுவ கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இல்லையென்றும் ஒழுங்கற்ற கும்பலாகவே அவர்கள் இயங்குவதாகவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அங்கு யுத்தத்தில் பயிற்சிபெற்ற அனுபவமிக்கவர்களை காணமுடியவில்லை என்றும் பெரும்பாலும் எவ்வித பயிற்சியுமற்ற இளைஞர்களும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களுமே களமுனைகளில் நிற்பதாகத் தெரிவித்தார். மேலும் முன்னைய இளைஞர் குறிப்பிட்டது போல் அடிப்படைப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உணவுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் சாதாரண மக்கள் இராணுவ நிலைகளை தங்கள் செல்போன்களில் படமெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று மே 30 முதல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி உக்ரெய்ன் யுத்தம் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு உக்ரெய்ன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்ற தொனியிலேயே குறிப்பிட்டு இருந்தார். உக்ரெய்ன் யுத்தத்தில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கோடிகாட்டி இருந்தார். ஆனால் நாடுதிரும்பியதும் மீண்டும் வீரமுழக்கங்களையே வெளியிட்டார்.
ஆனால் இப்போது உக்ரெய்ன் பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் குடியும் கும்மாளமும் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. தான் வரைந்த அமைச்சரவை ஒழுக்கவிதிகள் தனக்கே ஆபத்தாகும் என்றதால் அவற்றை நேற்று மே 30 அழித்துவிட்டார். சூ கிரே இன் சுயாதீன விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி  வீட்டிற்கு போவதற்கு முன்னரே பிரித்தானிய பிரதமர் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
யுத்தம் என்பது அழிவை ஏற்படுத்தும். யுத்தத்தால் எதனையும் சாதித்துவிட முடிவதில்லை. அமெரிக்கா வியட்நாமில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா அப்கானிஸ்தானில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா ஈராக்கில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா சிரியாவில் தொடுத்த யுத்தம், பிரித்தானியா லிபியாவில் தொடுத்த யுத்தம் இவை எல்லாமே அந்நாடுகளைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அங்கு யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆயதங்கள் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு எதிராக திருப்பப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.
இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரெயினுக்கும் இடையேயான யுத்தம், படையெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையேயான யுத்தமாக மாற்றப்பட்டு விட்டது. பிரித்தானியாவில் இருந்து உக்ரெய்ன் இராணுவத்துடன் இணையச் சென்றவர்களின் தகவல்களின் படி நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயதங்கள் ஏதும் அவர்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நேட்டோ நாடுகளில் உள்ள ஊடகங்களோ தினம் தினம் ஆயதங்கள் அனுப்பப்படுகிறது என்றும் அந்த ஆயதங்களைக் கொண்டு உக்ரெய்ன் ரஷ்ய இராணுவத்தை பின்னடையச் செய்வதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. உக்ரெய்ன் ஜனாதிபதி ஸ்லென்ஸ்கி தாங்கள் கிழக்கு உக்ரெய்னின் மரியோபோலை மீண்டும் கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்ட சில தினங்களிலேயே மரியோபோல் இரும்புத் தொழிற்சாலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரெய்ன் இராணுவத்தினர் (இவர்களில் ஒரு பகுதியின் தீவிர வலதுசாரிகள் என்றும் கூறப்படுகின்றது)  ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தனர்.
பிரித்தானிய மற்றும் நேட்டோ நாட்டு ஊடகங்கள் உசுப்பிவிட்டதேயல்லாமல் உக்ரெய்னின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஜனாதிபதி ஜோ பைடனும் உள்ளுர் அரசியலில் தங்களைத் தக்கவைக்க உசுப்பிவிட்டதில் உக்ரெய்ன் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. ஜேர்மன் உக்ரெய்ன் க்கு கனரக யுத்த தளபாடங்களை வழங்குவதாக கூறப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நெடுந்தூர ஏவகணைகளை வழங்கமாட்டோம் என தற்போது அறிவித்துள்ளது. உசுப்பிவிட்டவர்களை நம்பிய உக்ரெய்ன் இப்போது கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த நேட்டோ நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதிகள் மிகக் கச்சிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளை உசுப்பிவிட்டனர். இந்த உசுப்பலால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதால் அவர்கள் அதனை கச்சிதமாகச் செய்தனர். அங்குள்ள மக்கள் போரின் வலியை அனுபவிக்க வேண்டிவரும் என்று எண்ணம் பெரும்பாலும் வரவில்லை. 2009 ஜனவரியில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைவதே ஒரே வழியென்று தேசம்நெற் இல் பல கட்டுரைகள் வெளிவந்தது.  மே 17 2009 வரை தமிழீழத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று தான் புலிசார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு சமயத்தில் கட்டுடைக் குளத்தை புலிகள் தகர்த்தால் அந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இராணுவத்தின் உடல்கள் இறக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. இதே மாதிரியான செய்திகளை தற்போது பிரித்தானிய ஊடகங்களிலும் கேட்க முடிகின்றது, உக்ரெய்ன் பற்றி.
உக்ரெய்ன் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எவ்வதி தார்மீக உரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா படையெடுத்தபின் அழிவை எப்படி குறைத்துக்கொள்ளளலாம் என்பது பற்றி சிந்தித்து செயற்படுவதே உக்ரெய்ன் மக்களுக்கு நன்மையளிக்கும். உசுப்பிவிட்டு தங்கள் தங்கள் நலனை எட்டுவது நேர்மையற்றது. தற்போது உக்ரெய்ன் மிக நீண்ட கால அழிவுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரெய்னுக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கொட்டும் ஆயதங்கள் பல்வேறு நாடுகளிலும் செயற்படும் சட்டவிரோதமான ஆயதக் குழக்களிடம் சென்றடையும். உக்ரெய்ன் ஆயதக் கருப்புச் சந்தையின் மையம். இவ்வாயுதங்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளால் நோட்டோ நாடுகளிலேயே தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவே கடந்த காலங்களிலும் நடந்தது. இனிமேல் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தவவாதமும் இல்லை.
நேட்டோ நாடுகளால் குவிக்கப்படும் ஆயதங்கள் உக்ரெய்னில் ஆயுதக் கலாச்சாரம் ஒன்றைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு எல்லோரும் விரும்பி ஆயதம் ஏந்தவில்லை. பதினெட்டு வயதிற்கும் நாற்பது வயதிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரதேசங்களைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டு கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். நேட்டோ நாடுகளின் உந்துதலால் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை தொடர்வார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உக்ரெய்னால் நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. அதற்கான உள்ளுணர்வையும் ஆட்பலத்தையும் உக்ரெய்ன் இழந்து வருகின்றது.
அதேசமயம் ரஷ்யாவுக்கும் இதுவொரு சிக்கலான பலப்பரீட்சையே. ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரதேசங்களை நேட்டோ உதவியோடு உக்ரைன் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும். இந்த யுத்தம் மிக நீண்ட யுத்தமாக மாறிவருகின்றது என்பதை உணர முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக