புதன், 27 ஏப்ரல், 2022

ஜி கே வாசன் ஜி அக்டோபருக்குள் காங்கிரஸில் மீண்டும் ஐக்கியம்.. விளங்கிடும்

 மின்னம்பலம் : ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணை பகுதியில், இந்தப் பக்கம் மோடி அந்தப் பக்கம் சோனியா: வாசன் முடிவு என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், ' தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சிக்குள் இணைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே. அந்தோணி தொடர்ந்து வாசனுடன் பேசி வருகிறார். அதேநேரம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் வாசனுக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்குவதாக நேரில் அழைத்து பிரதமர் மோடியே பேசியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும் மே மாதம் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்த பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் முக்கியமான முடிவுகள் எடுக்கப் போவதாகவும் அந்த செய்தியில் நாம் தெரிவித்திருந்தோம்.

இந்தப் பின்னணியில் ஜி. கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம், "நமது கட்சி மேடைகளில் காங்கிரஸ் மீதான தாக்குதலை கைவிட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளே தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து தமாகா வட்டாரத்தில் விசாரித்தபோது, "அண்மையில் ஏ.கே .அந்தோணிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை நலம் விசாரிக்க நேரில் சந்தித்தார் ஜி கே வாசன். அப்போது அந்தோணி மீண்டும் காங்கிரஸுக்கு வர வேண்டியதன் அவசியத்தை ஜி.கே. வாசனிடம் அறிவுறுத்தியுள்ளார்.

சமீப நாட்களாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் மனம் திறந்து ஜி கே வாசன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

'அரசியல் ரீதியாக கட்சியின் இருப்பு முக்கியம் என்பதால்தான் நாம் பாஜக, அதிமுக அணியில் சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால் பாஜகவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவர்கள் இந்துத்துவத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அது தென்னிந்தியாவுக்கு உதவாது.

காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் பொம்மை மாதிரி. அதை எப்படிக் கவிழ்த்தாலும் நிமிர்ந்து விடும். தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளை சரி செய்வதற்கு பிரசாந்த் கிஷோர் வந்திருப்பது சரியான நடவடிக்கை. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் தலைமைக்கு இருக்கிறது' என்றெல்லாம் வாசன் சமீப நாட்களில் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

தமாகா மேடைகளில் காங்கிரஸ் கட்சியை தாக்கும் பேச்சுகள் இனி வேண்டாம் என வாசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படியே சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு கண்டன ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ் கட்சி மீதான தாக்குதல்கள் வெகுவாக குறைக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வாசனுக்கு முறைப்படியான தொடர்புகள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக வரும் அக்டோபர் மாதத்துக்குள் ஜி. கே. வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய கூடும். அதேநேரம் தமிழ்நாடு காங்கிரசில் அவருக்கு என்ன ரோல் என்ற கேள்விதான் வாசனின் காங்கிரஸ் இணைப்பை தற்போது தாமதமாக்கி வருகிறது"என்கிறார்கள்.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக