புதன், 27 ஏப்ரல், 2022

தெலுங்கானா முதல்வர் கேசிஆர் பாரதிய ராஷ்டிரிய சமிதி- தேசிய கட்சி தொடங்குகிறார்!

 Mathivanan Maran  -   Oneindia Tamil :  ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தாம் பாரதிய ராஷ்டிரிய சமிதி எனும் தேசிய கட்சி தொடங்க ஆலோசித்து வருவதாக அறிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.
ஆனால் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியில் இடம் பெறுவதற்கு பெரும்பாலான தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.


இதனால் சந்திரசேகர ராவின் முயற்சிகள் கைகூடாமல் இருந்தன. அதேநேரத்தில் பாஜகவை மிக கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார் சந்திரசேகர ராவ். குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியாக கருதப்படுகிற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மிக கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் சந்திரசேகர ராவ். தெலுங்கானா சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையே இடம்பெறாமல் செய்தார் சந்திரசேகர ராவ்.

இந்நிலையில் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் சந்திரசேகர ராவ் ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரசாந்த் கிஷோரும் சந்திரசேகர ராவ் வீட்டிலேயே தங்கி ஆலோசனை நடத்தினார்.இதுவும் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையக் கூடும் என கூறப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அப்போதுதான் சந்திரசேகர ராவுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்த்தார். இது காங்கிரஸை கடும் அதிருப்தி அடையச் செய்தது. இதனையடுத்து தாம் காங்கிரஸில் இணையப் போவது இல்லை; காங்கிரஸுக்கு இப்போது தேவை சரியான தலைமை மட்டுமே என கூறினார் பிரசாந்த் கிஷோர்.

இத்தனை பரபரப்புகளுக்கு இடையே இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சந்திரசேகர ராவ். அப்போது, பாரதிய ராஷ்டிரிய சமிதி எனும் தேசிய கட்சி ஒன்றை தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அறிவித்தார் சந்திரசேகர ராவ். மேலும் தெலுங்கானா மாடல் எனும் தெலுங்கானா ஆட்சி வெற்றிகரமான ஒன்று. இதனையே தேசிய அரசியலுக்கும் நாங்கள் முன்வைக்கிறோம். ஆகையால் தேசிய அரசியலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முக்கிய பங்கு வகிக்கும். எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றார் அவர். அதேபோல் நாட்டுக்கு இப்போது தேவை அரசியல் முன்னணி அல்ல; நாட்டுக்கு தேவை ஒரு மாற்றமே என்றும் சுட்டிக்காட்டினார் சந்திரசேகர ராவ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக