சனி, 30 ஏப்ரல், 2022

“இந்தி பேச முடியலன்னா நாட்டை விட்டு வெளியேறுங்க” : பா.ஜ.க அமைச்சரின் திமிர் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

 Vignesh Selvaraj -  கலைஞர் செய்திகள் : பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு முயற்சியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ‘கே.ஜி.எஃப் -2’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தி மொழி தொடர்பான சர்ச்சை கிளம்பியுள்ளது.


KGF - 2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், “ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல.

பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது. அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன.” எனப் பேசினார்.

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழிப் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” என ட்வீட் செய்தார்.

அதற்கு பதிலளித்த சுதீப், "நீங்கள் இந்தியில் எழுதிய பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொண்டோம். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலை என்னவாகும்? நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்லவா” எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. “இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லவே இல்லை, அலுவல் மொழியே உண்டு” என்று எத்தனை முறை விளக்கினாலும் அதுகுறித்த சர்ச்சை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் இப்படியாகச் சென்றுகொண்டிருக்கும் சூழலில், உத்தர பிரதேச பா.ஜ.க அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தி மொழியை விரும்பாதவர்கள் அயல்நாட்டுக்கார்கள் அல்லது அந்நிய நாட்டுக்காரர்களுடன் இணைந்து சதி செய்பவர்கள் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்தியை நேசிக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்றுவிடுங்கள்” என சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக