சனி, 23 ஏப்ரல், 2022

துப்பு தந்தால் ரூ.50 லட்சம்: சூடு பிடிக்கும் ராமஜெயம் வழக்கு!

துப்பு தந்தால் ரூ.50 லட்சம்: சூடு பிடிக்கும் ராமஜெயம் வழக்கு!

மின்னம்பலம் : தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும் கொலையாளிகள் குறித்து துப்பு தந்தால் ரூ. 50 லட்சம் ரொக்கம் அறிவிக்க இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் 2012ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அன்று நடைப் பயிற்சிக்காக வெளியே சென்று இருந்த ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக் குற்றவாளிகள் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.


இந்த கொலை வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமஜெயம் மனைவி லதா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில் 2017ல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையிலும் குற்றவாளிகள் சிக்கவில்லை.

வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் மற்றொரு சகோதரரான கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கவும் இந்த வழக்கு தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ராமஜெயம் கொலை வழக்கு குறித்து ஏற்கனவே விசாரித்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களின் மீதான மேல் விசாரணையைத் தொடங்கியது. அதோடு இக்குழு திருச்சியில் முகாமிட்டு வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியது. ராமஜெயம் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலும் ஆய்வு செய்தது.

இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு இன்று (ஏப்ரல் 22) மீண்டும் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சீலிடப்பட்ட கவரில் வைத்து ரகசிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர், “சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது. சம்பவம் நடந்த காலகட்டத்தில் பணியிலிருந்த ஆறு போலீசார் உட்பட 198 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும் கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 50 லட்சம் ரொக்க பணம் கொடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், தன் தம்பி கொலை குறித்து துப்பு தருபவர்களுக்கு சட்ட ரீதியாக இந்த ரொக்கத் தொகையை அமைச்சர் கே.என்.நேருவே தர இருக்கிறாராம்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக